இன்றைய பாடல்கள் உள்ளத்தைத் தொடவில்லை என இளையராஜா பேசினார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கம்பன் மணி மண்டபத்தில், கவியரசர் கண்ணதாசன் சமூகநல அறக்கட்டளை சார்பில் 24 ஆம் ஆண்டு கவியரசர் கண்ணதாசன் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில் திரைப்பட பாடலாசிரியர், தயாரிப்பாளர், கதை வசனகர்த்தா பஞ்சு அருணாச்சலத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி இளையராஜா பேசியதாவது:
நான் பாட்டு பாடுபவன், பேச்சாளன் கிடையாது. காரைக்குடி சிறப்பு வாய்ந்த மண். இங்குள்ள வீதியில் ஜீவானந்தம் முன்னே செல்ல ஜெயகாந்தன், எம்.ஏ. சீனிவாசன், டி.கே.பாலச்சந்திரன், ரகுநாதன், சிவகாமசுந்தரி, பொன்னி வளவன், தா.பாண்டியன் போன்ற தலைவர்கள் ஊர்வலமாகச் செல்ல அவர்களோடு நான் நடந்து போயிருக்கிறேன். அக்காலங்களில் கவியரசர் கண்ணதாசனும், ஜெயகாந்தனும்தான் எங்கள் சூப்பர் ஸ்டார்கள்.
கண்ணதாசனுக்கு இணையாக உலகில் வேறு எங்குமே இன்னொரு கவிஞன் கிடையாது. சூழலுக்குத் தகுந்தவாறு உடனுக்குடன் பாடல் எழுதும் வல்லமை பெற்றவர் கவியரசர் மட்டுமே. எனது படத்துக்கு முதலில் பாடல் எழுதுகிறார் எனக் கேட்டபோது, மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.
அனுபவங்கள் மூலம் பட்டுப்பட்டு தெளிவு ஏற்பட்டு பாடினால்தான் பாட்டு. அந்த அனுபவத்தை பாடல் வரிகளில் வெளிக் கொணர்ந்ததால்தான் கண்ணதாசனின் படைப்புகள் காலத்தை வென்றன. ஆனால், இன்றைய பாடல்கள் எதுவும் உள்ளத்தை தொடவில்லை. அக்காலத்தில், நான் பள்ளிக்கு நடந்து சென்றபோது ஒலிப்பெருக்கியில் ஒலித்த கண்ணதாசனின், மாலைப்பொழுதின் மயக்கத்திலே… எனத்தொடங்கும் பாடல் எங்களை ஈர்த்தது. ஏதோ ஒரு சூழ்நிலைக்கு அவர் எழுதிய பாடல் ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் பொருந்தியது.
காதுகேளாத இசைமேதை பீத்தோவன் இசைத்த இசைதான், இன்றளவும் உலகப் புகழ் பெற்றது. அவரது சாதனையை முறியடிக்க யாரும் இல்லை. நான் சாதனை எதுவும் செய்தவன் இல்லை. மனிதனாகப் பிறந்ததையே பாவமாக நினைக்கிறேன். அதனால் தான் திருவண்ணாமலையாரை சரணடைந்துள்ளேன்.
சினிமாவில் வாய்ப்புகள் தேடி அலைந்தபோது, இசைக்கருவிகளுடன் இசைத்து காட்டியபோதும் எங்களுக்கு யாரும் வாய்ப்பு தரவில்லை. ஆனால் மேஜையில் தாளம் போட்டு பாட்டுப்பாடி காட்டியபோது, பஞ்சு அருணாசலம் அன்னக்கிளி படத்துக்கு வாய்ப்பு கொடுத்தார். பஞ்சு அருணாசலம் எந்தக் கணக்கில் என்னை அறிமுகப்படுத்தினார் எனத் தெரியாது. எனக்கு பெற்றோர் இட்ட பெயர் ஞானதேசிகன், பள்ளியில் ராசய்யா எனச் சேர்த்தனர். ஆனால், பஞ்சு அருணாசலம்தான் எனக்கு இளையராஜா என்ற பெயரையும், இசைஞானி என்ற பட்டத்தையும் வழங்கினார்.
அந்த வகையில் கம்பன், கண்ணதாசன் வாழ்ந்த மண், எத்தனையோ ஆழ்வார்கள், நாயன்மார்கள், அடியார்கள் வாழ்ந்த இந்த மண்ணில் வாழ்வதுதான் எனக்குப் பெருமை. அதனால்தான், சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரைப்போல வருமா என்ற அனுபவத்தை என்னால் எழுதமுடிந்தது, என்றார்.
அறக்கட்டளை தலைவர் ரவி வீரப்பன் தலைமை வகித்தார். சென்னை கமலா சினிமாஸ் அதிபர் வள்ளியப்பன் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் கவிஞர். அரு.நாகப்பன் வரவேற்றார்.
பஞ்சு அருணாசலம் ஏற்புரையாற்றினார். சுதர்சனநாச்சியப்பன், பாஜக தேசியச் செயலர் ஹெச் ராஜா, நடிகர் பஞ்சு சுப்பு மற்றும் பலர் பங்கேற்றனர். அறக்கட்டளை உறுப்பினர் பெரியணன் நன்றி கூறினார்.