தமிழ் சினிமா

விஷால் அப்படிச் சொல்லியிருக்கத் தேவையில்லை: ஆர்.கே.சுரேஷ்

செய்திப்பிரிவு

ஆர்.கே.சுரேஷ் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03’. தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடைபெற்றது.

இதில் பேசிய ஆர்.கே.சுரேஷ், “நடிகர் சங்கத்தில் உறுப்பினராகி 4 ஆண்டுகள்தான் ஆகின்றன. எனவே, நான் தேர்தலில் போட்டியிட முடியாது. வருகிற நடிகர் சங்கத் தேர்தலில், விஷாலைத் தவிர மற்றவர்களுக்கு என் ஆதரவு உண்டு. உதயா உள்ளிட்டவர்கள் இணைந்து ஒரு அணியை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். அந்த அணிக்கு என் ஆதரவைத் தெரிவிப்பேன்.

விஷால் மீது நான் ஊழல் குற்றம் சாட்டவில்லை. ஏனென்றால், அவர் அப்படிப்பட்ட ஆளில்லை. ஆனால், யார் தனக்குத் தேவையோ, அவர்களைப் பயன்படுத்திக் கொள்வார். விஷால் தேர்தலில் போட்டியிட்டபோது, அவருடன் ஜே.கே.ரித்தீஷ் இருந்தார். அதன்பிறகு அவரைப் பிரிந்தார்.

விஷாலுடன் இணைந்துநின்ற உதயாவும் தற்போது உடன் இல்லை. விஷாலின் மேனேஜராக இருந்த முருகராஜும் தற்போது அவருடன் இல்லை. வரலட்சுமிக்கும் இதே நிலைதான். விஷால் ஏன் இப்படி இருக்கிறார் எனத் தெரியவில்லை.

நடிகர் சங்கத்தில் திருமண மண்டபங்கள் கட்டலாம், வணிகத்துக்கான ஏற்பாடுகள் செய்யலாம். ஆனால், நாடகக் கலைஞர்களுக்கு உடனடியாகத் தேவைப்படும் உதவிகள் எதுவும் சென்று சேரவில்லையே..? தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை, தமிழ் நடிகர்கள் சங்கம் என விதிப்படி மாற்றியமைக்க மீண்டும் முயற்சி செய்வோம்.

‘பில்லா பாண்டி’ பட விஷயத்தில் விஷாலுக்கும் எனக்கும் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. இருந்தாலும், ‘அந்தப் படத்தின் கதை நன்றாக இல்லை. அதனால் ஓடவில்லை’ என அவர் சொன்னது எனக்கு வருத்தமாக இருந்தது. விஷால் அப்படிச் சொல்லியிருக்கத் தேவையில்லை” என்றார்.

SCROLL FOR NEXT