இன்று நான் நடிகனாக மறுபடியும் பிறந்திருக்கிறேன் என்று 'ஜிப்ஸி' இசை வெளியீட்டு விழாவில் ஜீவா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
ஜீவா, நடாஷா சிங், லால் ஜோஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜிப்ஸி'. ராஜு முருகன் இயக்கியுள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஒலிம்பியா மூவிஸ் தயாரித்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில், படக்குழுவினரோடு தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்களும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் ஜீவா பேசும்போது, “ ‘ஜிப்ஸி' எனக்கு பெரிய பயணம். என் வீட்டில் நான் ஜிப்ஸி மாதிரிதான் வாழ்ந்துட்டு இருப்பேன். என் மனைவி ஒரு பஞ்சாபி, அப்பா ராஜஸ்தானி, அம்மா தமிழ்நாட்டுக்காரர். இந்த மூவரையும் பேலன்ஸ் பண்ணி வாழ்ந்துட்டு இருக்கேன்.
'ஜிப்ஸி' படம் எனக்கு வந்தபோது ரொம்ப மகிழ்ந்தேன். ஜாதி, மொழி எல்லாம் கடந்து ரொம்ப நடுநிலையான படமாக இது அமைந்தது. இப்படமே மக்களுடைய பார்வையில்தான் இருக்கும். இன்றைக்கு மொபைல் போன், நியூஸ் சேனல் அனைத்தையும் பார்க்காமல் இருந்தால் பிரச்சினைகளே இல்லாமல் இருப்பது போல இருக்கும். தமிழ்நாட்டில் என்ன பிரச்சினை, மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை தொலைக்காட்சி பார்த்து தெரிந்து கொள்வோம்.
இந்தியா முழுக்க பயணித்துப் பார்த்தால், உணர்வுகள் ஒன்றாகவே இருக்கிறது. இசை, கவிதை, இயற்கை என அனைத்தையும் ரசிக்கும் மக்கள் இந்தியா முழுக்க இருக்கிறார்கள். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இப்படத்துக்காகப் பயணித்திருக்கிறேன். இப்படம் முடித்துவிட்டு வெளியே வேறொரு மனிதனாகத்தான் வந்தேன். இப்படத்தில் ஒரு சமத்துவம் இருக்கும்.
சினிமாவில் யார் வேண்டுமானாலும் பணிபுரியலாம். அனைவருமே திறமைகளை சினிமாவில் வெளிப்படுத்தலாம். இப்படத்தில் இயக்குநர் ராஜு முருகன் நடிகனாக எனக்கு நல்லதொரு தீனி கொடுத்திருக்கிறார். ஒரு நடிகர் நன்றாக நடித்திருக்கிறார் என்றால், அந்த இயக்குநருடைய எழுத்துதான் காரணம். அவருடைய எழுத்துக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால், இன்று எழுத்தாளர்கள்தான் தேவை. இப்படத்தின் கதையைக் கேட்டவுடனே ரொம்ப எமோஷன் ஆகிவிட்டேன்.
ராஜு முருகன் ஒரு எழுத்தாளர், இயக்குநர், சமூக ஆர்வலர், கம்யூனிஸ்ட். அவருடைய தாக்கங்கள் நிறைய இப்படத்தில் இருக்கும். இந்த உலகத்தில் இருக்கு செடி, மரங்கள், நதி என தன்னைச் சுற்றி இருக்கும் அனைத்தையும் ரசிப்பவன்தான் 'ஜிப்ஸி'. இந்த ரோலில் நடிக்கும்போது நிறைய இடங்களில் எமோஷனல் ஆகிவிட்டேன். இன்று நான் நடிகனாக மறுபடியும் பிறந்திருக்கிறேன். ஒவ்வொரு படமுமே வித்தியாசமாகக் கொடுக்க வேண்டும் என முயற்சிக்கிறேன். ஒரு புறம் கமர்ஷியல் படங்கள், மறுபுறம் உலக சினிமா மாதிரியான படங்கள் என ஓடிக் கொண்டிருக்கிறேன்" என்று பேசினார் ஜீவா.