அஜித்துக்கு ‘காதல் மன்னன்’, ‘அமர்க்களம்’, ‘அட்டகாசம்’ என்று மிகப்பெரிய வெற்றி படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் சரண். தொடர் போராட்டங்களுக்கு இடையே, மீண்டும் வெற்றிப் பாதையில் தடம்பதிக்க, ‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ படப் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார். இறுதிகட்ட படப்பிடிப்பில் இருந்தவருடன் ஒரு நேர்காணல்..
இது ‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ மாதிரியா?
‘வசூல்ராஜா’ போலவே இதுவும் முழுக்க காமெடி தான். ஒரு பெரிய ரவுடி இதுவரை இந்திய சினிமாவில் சந்திக்காத பிரச்சினையை சந்திக்கிறான். என்ன பிரச் சினை, எப்படி எதிர்கொள்கிறான் என்பது திரைக்கதை.
‘பிக் பாஸ்’ ஆரவ்வை எப்படி தேர்வு செய்தீர்கள்?
எந்த இமேஜும் இல்லாத ஒரு நாயகன் தேவைப் பட்டார். நல்ல உடலமைப்போடு, நன்கு நடிக்கவும் தெரிந்திருக்கணும் என்று தேடினேன். அப்போது, தயாரிப்பு நிறுவனம் மூலமாக ஆரவ் உள்ளே வந்தார். அவரது முகம் தமிழக மக்களுக்கு ரொம்பவே பரிச்சயமானது. ரவுடி கதை என்பதால், வித்தியாசமான உடல்மொழிகள் தேவைப்பட்டது. சரியாக உள்வாங்கி பண்ணினார். தமிழ் சினிமாவுக்கு நல்லதொரு ஆக்சன் ஹீரோ கிடைச்சிருக்கார்.
‘அமர்க்களம்’ படத்துக்குப் பிறகு மீண்டும் ராதிகாவுடன் கூட்டணி அமைத்துள்ளீர்களே..
‘அமர்க்களம்’ படத்துக்கு நேர் எதிர் கதாபாத்திரம் அவருக்கு. ஆரவ் அம்மாவா நடித்துள்ள ராதிகா, ‘சுந்தரி பாய்’ என்ற லேடி டானாக வருகிறார். அவரது முகபாவங்கள் எம்.ஆர்.ராதாவை ஞாபகப்படுத்தின. ‘பொம்பள எம்.ஆர்.ராதா நடிச்சா எப்படி இருக் குமோ, அப்படி பண்ணுங்க’ என்றேன். அதை சரியாக பண்ணியிருக்கார்.
ஒவ்வொரு படத்திலும் புதுப்புது நாயகிகளை அறிமுகம் செய்வீர்களே, இதில் யார்?
காவ்யா தாப்பர் என்ற மும்பை நாயகி. தெலுங்கு படம் ஒன்று பண்ணியிருக்காங்க. படப்பிடிப்பு முழுக்க சென்னை பெரம்பூர்தான். 80 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ஆகஸ்ட் வெளியீட்டுக்கு தயாராகிட்டு வர்றோம்.
மீண்டும் பெரிய ஹீரோக்களை வைத்து எப்போது படம் இயக்கப் போகிறீர்கள்?
ஓர் இயக்குநருக்கு பெரிய ஹீரோ, சின்ன ஹீரோ என்ற வேறுபாடு கிடையாது. எல்லா படங்களும் பண்ணனும். எல்லோருடனும் படங்கள் பண்ண னும். பெரிய ஹீரோக்கள் படங்கள் பண்ணும் போது பிரஷர் அதிகம் இருக்கும். ‘Pressure with Pleasure’ என்றுதான் பணிபுரிவேன். ‘காதல் மன்னன்’, ‘அமர்க்களம்’ ஆகியவை அஜித்துக் காக பிரத்யேகமாக செய்த படங்கள். இப்போது அவருக்கு பின்னால் ஒன்றரை கோடி ரசிகர்க ளின் முகங்கள் தெரிகின்றன. அதற்கேற்ப படம் செய்வது இன்னும் அதிக பிரஷர் கொண்டது. அதேபோலதான் விஜய் படமும். ஆனாலும், அவர்களுக்கு ஏற்றார்போல கட்டாயம் ஒரு படம் பண்ணுவேன். ஒருவேளை இந்த கதையை 10 ஆண்டுகளுக்கு முன்பு பண்ணி யிருந்தால், கண்டிப்பாக அஜித்துடன்தான் பண்ணியி ருப்பேன். அவரது நகைச் சுவை உணர்வு எனக்கு தெரியும். அவர் அதை எல்லாம் தாண்டிச் சென்று விட்டதால், இக்கதைக்குள் அவரை பொருத்த முடிய வில்லை.
இது 2-ம் பாகம் எடுக்கும் சீசன். உங்களது படங்களில் 2-ம் பாகம் எடுக்கக் கூடாதா?
கண்டிப்பாக அப்படி பண்ண மாட்டேன். முதல் பாகம் என்பது ஒரு கிளாசிக் ஆகும்போதுதான் 2-ம் பாகத்துக்கான எண்ணமே வரும். கிளாசிக் என்ற நற்பெயரை நாமே தட்டிப் பறிக்கக் கூடாது. அந்த படம், தலைப்பு, ஹீரோ இதையெல்லாம் யாராலும் மாற்ற முடியாது. அதை நானேகூட மாற்றக்கூடாது.
மீண்டும் படம் தயாரிக்கும் எண்ணம் உள்ளதா?
இல்லை. இயக்குநர் + தயாரிப்பாளராக இருப்பது கடினமான வேலை. அதனால் வந்த இழப்பு அதிகம். எனவே, இனி இடைவெளி இல்லாத இயக்குநர் சரணை மட்டுமே காணலாம். இதே தயாரிப்பு நிறுவ னத்துக்கு இன்னொரு படம் கேட்டுள்ளனர். கவிதாலயாவுக்காக புதுமையான வெப் சீரிஸ் பண்ண பேச்சுவார்த்தை போயிட் டிருக்கு. அது பாலசந்தர் சார் சம்பந்தப் பட்டது. ஆனால், வாழ்க்கை வரலாறு அல்ல. அது என்ன என்பது சஸ்பென்ஸ்.
‘முனி’ படத்தை தயாரித்தவர் நீங்கள். ‘காஞ்சனா’ வரிசையின் தொடர் வெற்றி குறித்து..
அந்த கதையை என்னிடம் சொன்ன போது, தொடர் பாகங்களாக பண்ணும் எண்ணம் லாரன்ஸுக்கே இல்லை. அவரை நான் நடிகராக அறிமுகப்படுத்தினேன் என்பதற்காக, என் பேனரில் படம் பண்ணி னார். ஆரம்பித்த ஆள் என்ற முறையில் பெருமிதமாக உணர்கிறேன்.