தமிழ் சினிமா

தொலைக்காட்சி ஒளிபரப்பிலும் விஸ்வாசம் சாதனை

ஸ்கிரீனன்

மே 1-ம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட 'விஸ்வாசம்' திரைப்படம், டிஆர்பி-யில் அனைத்து தமிழ்ப் பட ஒளிபரப்பையும் பின்னுக்குத் தள்ளியது.

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், ஜெகபதி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விஸ்வாசம்'. ஜனவரி 10-ம் தேதி ரஜினி நடிப்பில் வெளியான 'பேட்ட' படத்துடன் இப்படமும் வெளியானது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் 'விஸ்வாசம்' படத்துக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது.

தமிழில் பல திரைப்படங்களின் வசூல் சாதனையை பின்னுக்குத் தள்ளியது. இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை கடும் போட்டிக்கும் இடையே சன் டிவி கைப்பற்றியது. மே 1-ம் தேதி உழைப்பாளர் தினம் மற்றும் அஜித் பிறந்த நாளை முன்னிட்டு அன்று மாலை 'விஸ்வாசம்' படத்தை ஒளிபரப்பியது.

இந்நிலையில், மே தினத்துக்கான டிஆர்பி எனப்படும் கணக்குகள் வெளியாகியுள்ளன. அதன்படி, இதற்கு முந்தைய தமிழ் படங்களின் டிஆர்பி சாதனைகள் அனைத்தையும் முறியடித்து 'விஸ்வாசம்' முதலிடத்தைப் பிடித்துள்ளது. டிஆர்பி-யில் 18,143 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

இதற்கு அடுத்ததாக 'பிச்சைக்காரன்' - 17696 புள்ளிகள், 'பாகுபலி 2' - 17070 புள்ளிகள், 'சர்கார்' - 16906 புள்ளிகள் என அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. வசூல் ரீதியான பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, தொலைக்காட்சி ஒளிபரப்பிலும் சாதனை புரிந்துள்ளது.

SCROLL FOR NEXT