தமிழ் சினிமா

அதர்வாவின் ‘100’ திரைப்படம் தடை நீங்கியது: நாளை வெளியாகிறது

செய்திப்பிரிவு

சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா, ஹன்சிகா, ராதாரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் '100'. ஆரோ சினிமாஸ் தயாரித்துள்ள இப்படம் நீண்ட நாட்களாக வெளியீட்டுக்காக காத்திருந்த நிலையில் தடை நீங்கி நாளை திரைக்கு வர உள்ளது.

பைனான்ஸ் பிரச்சினையில் சிக்கியதால், மே 3-ம் தேதி வெளியீடு என்று திட்டமிட்டார்கள். ஆனால், அன்றைய தினத்திலும் வெளியாகாமல், மே 9-ம் தேதிக்கு மாற்றினார்கள். ஆனால் மே 9-ம் தேதியும்  வெளியாகவில்லை என்று தெரிய வந்துள்ளது.

இதனால் படத்தின் இயக்குநர் சாம் ஆண்டன், " '100' திரைப்படத்தின் மீது மிக அற்புதமான விமர்சனங்களைக் கொடுத்த தங்கள் அனைவருக்கும் நன்றி. நானும் எனது குழுவினரும் இந்தப் படத்திற்காக உடலையும் ஆன்மாவையும் ஒருமித்து செலுத்தி பணியாற்றியிருக்கிறோம்.

ஆனால், குறித்த நேரத்தில் படத்தை ரிலீஸ் செய்ய இயலவில்லையே என வேதனைப்படுகிறேன். மன்னிக்கவும். இன்று  '100' திரைப்படம் வெளியாகாது. எனது வேலை முடிந்துவிட்டது. எனது அடுத்த படமான 'கூர்கா'வுக்குச் செல்கிறேன்" என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.

இப்படம் கடந்த 8-ம் தேதி பத்திரிகையாளர்களுக்குத் திரையிட்டு காட்டப்பட்டது. பலரும் இயக்குநருக்குப் பாராட்டு தெரிவித்தார்கள். இந்நிலையில் இந்தப்படத்தின் மீதான தடை நீங்கிய நிலையில் நாளை 100 படம் வெளியாகிறது என படபிடிப்பு ம்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

'100' படத்துக்குப் பிறகு யோகி பாபு நடிப்பில் தொடங்கப்பட்ட 'கூர்கா' படத்தின் படப்பிடிப்பும் முழுமையாக முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. இம்மாத இறுதியில் அல்லது ஜூன் முதல் வாரத்தில் 'கூர்கா' படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

SCROLL FOR NEXT