தமிழ் சினிமா

அரண்மனை படத்துக்கு தடை கோரி வழக்கு: சுந்தர்.சி-க்கு நீதிமன்றம் நோட்டீஸ்

செய்திப்பிரிவு

சுந்தர்.சி இயக்கத்தில் வெளியாகியுள்ள 'அரண்மனை' படத்துக்கு தடை கோரி, சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வினய், ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் 'அரண்மனை'. விஷன் ஐ மீடியா நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்து வெளியிட்டு இருக்கிறது.

இம்மாதம் 19-ம் தேதி வெளியாகி இருக்கும் இப்படத்துக்கு தடை கோரி, சென்னை சிவில் நீதிமன்றத்தில் இயக்குநர் எம்.முத்துராமன் மனு தாக்கல் செய்துள்ளார்.

இயக்குநர் எம்.முத்துராமன் தாக்கல் செய்துள்ள மனுவில், "தமிழ் திரையுலகில் கடந்த 35 ஆண்டுகளாக தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் இருந்து வருகிறேன். இதுவரை 27 திரைப்படங்களை தயாரித்தும், 26 படங்களை வெளியிட்டும் இருக்கிறேன். இதில் பெரும்பாலான படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

கடந்த 1978-ஆம் ஆண்டு நடிகர்கள் ரஜினிகாந்த், விஜயகுமார், ஸ்ரீதேவி, லதா ஆகியோர் நடித்த 'ஆயிரம் ஜென்மங்கள்' என்ற படத்தை தயாரித்து வெளியிட்டேன். இந்தப் படம் அந்த காலத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்தப் படத்தை மீண்டும் தயாரிக்க திட்டமிட்டேன். 'ஆயிரம் ஜென்மங்கள்' பாகம் 2 என்ற தலைப்பில் மீண்டும் தயாரிக்க முடிவு செய்து செல்வா என்ற செல்வகுமாரை இயக்குநராக தேர்வு செய்தேன். முன்தொகையாக ரூ.25 லட்சம் கொடுத்துள்ளேன். மேலும், வேறு சில தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் பணம் கொடுத்துள்ளேன்.

இந்நிலையில், சினிமா துறையை சேர்ந்த எடிட்டர்கள், மக்கள் தொடர்பாளர்கள் மற்றும் பிறர் மூலம் 'அரண்மனை' என்ற பெயரில் வெளியாகியுள்ள படம் 'ஆயிரம் ஜென்மங்கள்' படத்தின் கதையை ரீமேக் செய்து தயாரிக்கப்பட்டுள்ளது என்று எனக்கு தகவல் தெரியவந்தது.

இந்தப் படத்தை 'விஷன் ஐ மீடியா' என்ற நிறுவனம் தயாரித்து, சுந்தர்.சி இயக்கியுள்ளார். 'ஆயிரம் ஜென்மங்கள்' படத்தை அவர்கள் மீண்டும் வேறு பெயரில் எடுத்துள்ளது குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலில் கடந்த 1-ஆம் தேதி புகார் செய்தேன். இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, 'அரண்மனை' படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இது தொடர்பாக பதில் அளிக்கும்படி விஷன் ஐ மீடியா நிறுவனம் மற்றும் இயக்குநர் சுந்தர்.சி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

SCROLL FOR NEXT