நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள ‘கொலையுதிர் காலம்’ படம், ஜூன் 14-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சக்ரி டோலட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கொலையுதிர் காலம்’. ஹீரோயினை மையப்படுத்திய இந்தப் படத்தில், முதன்மைக் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார். அவருடன் சேர்ந்து பிரதாப் போத்தன், பூமிகா ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை முதலில் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்தார். மேலும், இசையமைப்பாளராகவும் ஒப்பந்தமானார். ஆனால், என்ன ஆனதோ தெரியவில்லை... தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என்ற இரண்டு பொறுப்புகளில் இருந்தும் யுவன் விலகினார்.
எனவே, எட்ஸெட்ரா என்டெர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் படத்தைத் தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு இதன் படப்பிடிப்புக்கான வேலைகள் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் இந்தி வெர்ஷனான ‘காமோஷி’ படத்தில், நயன்தாரா கதாபாத்திரத்தில் தமன்னா நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரங்களில் பிரபுதேவா, பூமிகா நடித்துள்ளனர். இந்தப் படம், வருகிற 31-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. எனவே, ‘கொலையுதிர் காலம்’ படமும் அதே தேதியில் வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்தது.
ஆனால், ஜூன் 14-ம் தேதி ‘கொலையுதிர் காலம்’ ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘விஸ்வாசம்’, ‘ஐரா’, ‘Mr. லோக்கல்’ படங்களைத் தொடர்ந்து, இந்த வருடத்தில் ரிலீஸாகும் நயன்தாராவின் 4-வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.