என் கருத்துகளை எவ்வித பயமுமின்றி உரக்கச் சொல்வேன் என்று பாஜக வெற்றி பெற்றிருப்பது குறித்து சித்தார்த் கருத்து தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல், கடந்த 19 ஆம் தேதி முடிவடைந்தது. இன்று (மே 23) நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது.
பகல் 2:00 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 347 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 88 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. மத்தியில் பாஜக ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது. இதனால், பலரும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே பல்வேறு கருத்துகளைத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகிறார் சித்தார்த். தற்போது பாஜக ஆட்சியமைத்து மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்பது உறுதியாகவிட்ட நிலையில், சித்தார்த் தனது ட்விட்டர் பதிவில், “2019 தேர்தலில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள்.
நாட்டை நல்ல உயரத்துக்கு எடுத்துச் செல்வீர்கள் என நம்புகிறேன். தேசத்தின் நலனுக்காக எனது நேர்மையான கருத்துகளை, ஒரு குடிமகனாக, எந்தவித பயமுமின்றி எப்போதும் உரக்கச் சொல்வேன் என உறுதி கூறுகிறேன். தயவுசெய்து அன்பை பரப்புங்கள். இறைவன் ஆசிர்வதிக்கட்டும். ஜெய்ஹிந்த்” என்று தெரிவித்துள்ளார்.