வடிவேலு கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும், காத்திருக்கிறோம் என்று 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
#Pray_for_Neasamani என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டினால், மீண்டும் வடிவேலு கொண்டாடப்பட்டு வருகிறார். ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள், அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள், திரையுலக பிரபலங்கள் என அனைவருமே இந்த ஹேஷ்டேக்கில் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு வடிவேலு அளித்த பேட்டியில், “'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' தயாரிப்பாளர் ஷங்கரும், தயாரிப்பாளர் சங்கமும் சேர்ந்து என் வளர்ச்சியை முடக்குகிறார்கள். என் கையில் 10 படங்கள் உள்ளன. ஆனால், என்னால் நடிக்க முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார். இதனால் மீண்டும் 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்தப் பிரச்சினை தொடர்பாக இயக்குநர் ஷங்கரின் தயாரிப்பு நிறுவனத்திலிருந்து, “அற்புதமான நடிகருடன் நாங்கள் எங்கள் வெற்றிப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க நினைத்தோம். ஆனால், படப்பிடிப்பை ஆரம்பிக்கும் முன் என்ன கதையை ஒப்புக்கொண்டோமோ, இந்தக் கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்யும் கதையை எடுக்க நினைத்தோம்.
பல கோடிகள் செலவழித்து அரங்கம் அமைத்தோம். அவர் 'இம்சை அரசம் 23-ம் புலிகேசி' 2-ம் பாகத்தில் நடிக்க வருவார் என்று நம்பினோம். ஆனால் அவர் தாமதம் செய்து கொண்டே இருந்தார். முதலில் ஒப்புக்கொண்டதை விட அதிக சம்பளம் கேட்டார்.
திரைக்கதையில் மாற்றங்கள் செய்ய வேண்டுமென்றார். அவர் கூறிய 15-க்கும் அதிகமான மாற்றங்களைச் செய்துவிட்டோம். தற்போது இயக்குநர் சிம்புதேவனையும் மாற்ற வேண்டும் என்கிறார். அவர் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும். படத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் அவர் சொல்படி மாற்ற நினைக்கக் கூடாது. எங்களுக்கு இன்னும் இந்தப் படத்தை எடுப்பதில் விருப்பம் உள்ளது. அவரது பதிலுக்காகக் காத்திருக்கிறோம்” என்று தெரிவித்தனர்.