தமிழ் சினிமா

போலீஸ் கதைக்கு நோ; சமூக அக்கறை கதைக்கு ஓகே: அஜித்தின் அடுத்த பட அப்டேட்

செய்திப்பிரிவு

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள அடுத்த படம், சமூக அக்கறை சார்ந்த கதையுடன் உருவாகவுள்ளது.

அஜித் நடிப்பில் ரிலீஸுக்குத் தயாராகிவரும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. எச்.வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூர், இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தியில் சூப்பர் ஹிட்டான ‘பிங்க்’ படத்தின் ரீமேக் இது. அஜித் ஜோடியாக வித்யா பாலன் நடிக்க, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அபிராமி, ரங்கராஜ் பாண்டே ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

வருகிற ஆகஸ்ட் 10-ம் தேதி இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அஜித்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. ‘விஸ்வாசம்’ படத்தைப் போலவே, இந்தப் படத்துக்கும் இரவில் டப்பிங் பேசி வருகிறார் அஜித்.

இந்நிலையில், அஜித்தின் அடுத்த படம் பற்றி அடிக்கடி செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்தப் படத்தையும் போனி கபூர் தயாரிக்க, எச்.வினோத் இயக்குகிறார். இது எச்.வினோத்தின் நேரடிக் கதையாகும்.

முதலில் போலீஸ் கதையொன்றைச் சொல்லியிருக்கிறார் எச்.வினோத். ஆனால், தற்போதைக்கு போலீஸ் கதை வேண்டாம் என அஜித் சொல்ல, அடுத்ததாக சமூக ஆர்வலர்கள் சம்பந்தப்பட்டக் கதையொன்றைச் சொல்லியிருக்கிறார். சமூக அக்கறை மிகுந்த அந்தக் கதையைக் கேட்டதும், அஜித் ஓகே சொல்லிவிட்டாராம்.

அடுத்த ஆண்டு (2020) புத்தாண்டு விடுமுறையில் இந்தப் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைப்பார் எனத் தெரிகிறது.

SCROLL FOR NEXT