எழுத்தாளர் சந்திரா இயக்கத்தில் கரு.பழனியப்பன் நடித்துள்ள 'கள்ளன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.
இயக்குநர்கள் அமீர் மற்றும் ராம் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் எழுத்தாளர் சந்திரா. இவர் எழுதிய கதையில் நாயகனாக நடிக்க சம்மதம் தெரிவித்தார் இயக்குநர் கரு.பழனியப்பன். இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது.
'கள்ளன்' என்று பெயரிடப்பட்ட இப்படத்தில் நிகிதா, வேல.ராமமூர்த்தி, செளந்தர்ராஜா உள்ளிட்ட பலர் கரு.பழனியப்பனுடன் நடித்துள்ளனர். முழுக்க படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. அப்பணிகள் முடிவடைந்தாலும் சரியான வெளியீட்டு தேதிக்காக காத்திருந்தது.
தற்போது வெளியிட முடிவு செய்து, விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியுள்ளனர். 'கள்ளன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.
இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகும் சந்திரா, “இந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்து தன்னைத் தயார்படுத்திக் கொண்டார் இயக்குநர் கரு.பழனியப்பன் சார். படத்தின் சூழ்நிலை மற்றும் பருவநிலைக்கு ஏற்ப தன்னை தயார் செய்து கொள்ள கதைக்காக நான் செய்த ஆராய்ச்சியைத் தொடர்ந்து அவரும் கூடுதல் முயற்சிகள் எடுத்தார்.
‘கள்ளன்’ இருவேறு காலங்களின் பின்னணியில் அமைந்த ஒரு கதையாகும். 1988-89ல் ஒன்றும், 1975-ம் ஆண்டில் இன்னொரு கதையும் நடக்கும். வேட்டையாடும் சமூகம் நம்முடையது. ஆதி மனிதன் வேட்டையிலிருந்து தான் வாழ்வைத் தொடங்கினான். தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா என்று நான்கு மாநிலங்களில் பயணிக்கிறது கதை.
தேனி அருகே, கிராமத்தில் வசிக்கும் ஒருவனுக்கு, வேட்டையாடுவதைத் தவிர தனது வாழ்வாதாரத்திற்காக வேறொன்றும் தெரியாது. அரசாங்கம் வேட்டையாடுவதைத் தடை செய்யும் போது, காலம் அவனது வாழ்க்கையை எப்படியெல்லாம் வேட்டையாடுகிறது என்பது தான் கதை” என்று தெரிவித்துள்ளார்.
மதியழகன் தயாரித்துள்ள இந்தப் படத்தின் பாடல்களை மறைந்த நா.முத்துக்குமார், யுகபாரதி, ஞானகரவேலு ஆகியோர் எழுதியுள்ளனர். படம் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.