தமிழ் சினிமா

எச்.வினோத்தின் அடுத்த படம்: மீண்டும் உடல் இளைக்கும் அஜித்

ஸ்கிரீனன்

எச்.வினோத் இயக்கவுள்ள அடுத்த படத்துக்காக, மீண்டும் உடல் இளைத்து ஸ்லிம்மாகியுள்ளார் அஜித்.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'நேர்கொண்ட பார்வை'. வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார்.  இந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'பிங்க்' படத்தின் ரீமேக்காகும். ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இப்படத்தைத் தொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படத்தையும் இயக்கவுள்ளார் எச்.வினோத். இதையும் போனி கபூரே தயாரிக்கவுள்ளார். இப்படம் எச்.வினோத்தின் நேரடி கதையாகும். இதன் கதை முடிவு செய்யப்பட்டு, தற்போது அதற்கு திரைக்கதை வடிவம் எழுதத் தொடங்கியுள்ளார்.

தற்போது இந்த புதிய கதைக்காக, உடல் இளைத்து ஸ்லிம்மாகியுள்ளார் அஜித். 'விவேகம்' படத்துக்காக எப்படி உடல் இளைத்து ஸ்லிம்மாக இருந்தாரோ, அதன் பாணியிலே தற்போது வந்துள்ளார். இப்போது ரசிகர்களுடன் அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருவதன் மூலம், இது உறுதியாகியுள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

SCROLL FOR NEXT