கமர்ஷியல் படங்கள் மட்டுமே செய்ய விரும்பவில்லை என்று காஜல் அகர்வால் அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
தெலுங்கில் ’லட்சுமி கல்யாணம்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் காஜல் அகர்வால். அதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல முன்னணி நாயகர்களுடன் நடித்து முன்னணி நாயகியாக வலம் வருகிறார்.
ஆனால், முன்பைப் போல் அல்லாமல் தற்போது படங்களை மிகவும் தேர்வுசெய்து நடித்து வருகிறார் காஜல் அகர்வால். மேலும், கமர்ஷியல் படங்களுக்கு இடையே, நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களிலும் நடிக்கத் தொடங்கியுள்ளார்.
தற்போது ‘சீதா’ என்ற தெலுங்குப் படத்தில் நடித்துள்ளார். இப்படத்துக்காக அளித்துள்ள பேட்டியில், “இப்போது இயக்குநர்கள் வலிமையான பெண் கதாபாத்திரங்களை எழுதுகிறார்கள்.
நான் ஏதாவது வித்தியாசமாக நடிக்க வேண்டும் என்று பார்த்துக் கொண்டிருக்கும்போது ‘Awe’ வாய்ப்பு வந்தது. அந்தப் படம் பரவாயில்லை ரகத்தில் வசூலித்தது. எனக்குப் பாராட்டுகள் கிடைத்தன. எனது எல்லைகளை விரிவாக்க வேண்டும் என்பதே என் எண்ணம். அந்தப் படம் எனக்குப் புதிய மரியாதையைப் பெற்றுத் தந்தது. கமர்ஷியல் படங்களில் மரத்தைச் சுற்றிப் பாடல்கள் பாடுவது பற்றி எனக்கு இன்றும் ஆட்சேபனை இல்லை. ஆனால், அதை மட்டுமே செய்ய விரும்பவில்லை.
ஒரே மாதிரி கதாபாத்திரங்களில் நடிக்கக் கூடாது என்பதில் நான் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் காஜல் அகர்வால்.
தமிழில் அவரது நடிப்பில் ‘பாரீஸ் பாரீஸ்’ படம் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. ‘இந்தியன் 2’ படத்திலும் கமலுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் காஜல் அகர்வால் என்பது குறிப்பிடத்தக்கது.