தமிழ் சினிமா

டப்பிங் படங்களுக்கு வசனம் எழுத தனித்திறமை வேண்டும்: கே.பாக்யராஜ்

செய்திப்பிரிவு

டப்பிங் படங்களுக்கு வசனம் எழுதுவதென்பது சவால்களும் சங்கடங்களும் நிறைந்தது.

வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்தவர் சாயாஜி ஷிண்டே. இவர் அகோரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படத்துக்கு ‘அகோரி’ எனத் தலைப்பு வைத்துள்ளனர். ஆர்.பி.பாலா மற்றும் சுரேஷ் கே மேனன் இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் கே.பாக்யராஜ், பி.ஜி.முத்தையா, நடிகை கஸ்தூரி, நடிகர் மைம் கோபி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய கே.பாக்யராஜ், “தயாரிப்பாளர் பாலா, மொழிமாற்றுப் படங்களுக்கான வசனகர்த்தா என்று சொன்னார்கள். ‘புலி முருகன்’ மற்றும் ‘லூசிஃபர்’ ஆகிய படங்களுக்கு வசனம் எழுதி இருப்பதாகச் சொன்னார்கள். நான் ஒரே ஒரு டப்பிங் படத்துக்கு மட்டும்தான் வசனம் எழுதினேன்.

கலைப்புலி எஸ்.தாணுவின் வெளியீட்டில், ராம் சரண் நடித்த ‘மகதீரா’ என்ற படத்துக்கு, நான் தமிழில் வசனம் எழுதினேன். இதுவரைக்கும் நான் நேரடியாகத்தான் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளேன். மொழிமாற்றுப் படங்களுக்கு எழுதியதில்லை. இதை ஒரு அனுபவமாக எண்ணி எழுதச் சம்மதித்தேன். அங்கு சென்றவுடன்தான், அதில் உள்ள சவால்களும் சங்கடங்களும் புரிந்தன.

‘அம்மா’ என்ற வார்த்தை எல்லா மொழியிலும் ஒன்றாகத்தான் இருக்கும். ஆனால், தெலுங்கில் அப்பாவை ‘நானா’ என்று அழைப்பார்கள். இதை எப்படி தமிழ்ப்படுத்துவது என்று தெரியாமல் கஷ்டப்பட்டேன். அந்தத் தருணத்தில்தான் டப்பிங் பட வசனகர்த்தாக்கள் படும் சிரமத்தை உணர்ந்தேன். அதன் பிறகுதான் டப்பிங் படத்துக்கு வசனம் எழுத தனித்திறமை வேண்டும் என்பதை உணர்ந்தேன்” என்றார்.

SCROLL FOR NEXT