ரஜினியை, அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியுள்ளார் இயக்குநர் சிவா. இதனால், இருவரும் இணைந்து படம் பண்ணவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சிவா இயக்கத்தில், அஜித் நடிப்பில் வெளியான படம் 'விஸ்வாசம்'. இப்படத்துக்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, சிவாவின் அடுத்த படம் குறித்து பல்வேறு செய்திகள் வெளியான வண்ணமிருந்தன.
'சிறுத்தை' படத்தின்போது போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, தனது அடுத்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்துக்குப் பண்ணவுள்ளார் சிவா. இதில், சூர்யா நடிப்பது உறுதியாகி, இதர நடிகர்கள் மற்றும் படப்பிடிப்பு இடங்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே, இன்று (மே 28) காலை ரஜினியை சந்தித்துப் பேசியுள்ளார் சிவா. இச்சந்திப்பால், ரஜினி - சிவா கூட்டணி இணையும் எனத் தெரிகிறது. இருவருக்குமான பேச்சுவார்த்தை சுமார் 1 மணி நேரம்வரை நீடித்துள்ளது. இதைப்போலவே ரஜினி - கார்த்திக் சுப்பராஜ் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அடுத்த சில நாட்களிலேயே, இந்தக் கூட்டணி அறிவிப்பு வெளியானது.
தற்போது சூர்யா படத்தை இயக்கவுள்ளார் சிவா. அதற்குப் பிறகு ரஜினி படத்தை இயக்குவார் எனத் தெரிகிறது. மேலும், இப்பேச்சுவார்த்தையில் 'விஸ்வாசம்' படத்தை வெகுவாகப் பாராட்டிப் பேசியுள்ளார் ரஜினி. அப்படம் மிகவும் பிடித்துவிட்டதால்தான், தனக்கு ஏதேனும் கதை இருக்கிறதா என்று சிவாவை அழைத்து ரஜினி பேசியதாகத் தெரிகிறது.
சிவாவுடனான சந்திப்பு முடிந்தவுடன்தான், வீட்டிற்கு வெளியே இருந்த பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்துள்ளார் ரஜினி.