'அஜித்தோட சேர்ந்து திரும்பவும் படம் பண்ணனும். அதுக்காக எல்லா கடவுள்கிட்டயும் வேண்டிக்கிட்டிருக்கேன்’ என்று ‘காதல்கோட்டை’ தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் தெரிவித்தார்.
’காதல் கோட்டை’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தயாரித்த சிவசக்தி பாண்டியன், தனியார் இணையதள சேனலுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அதில் அவர் கூறியதாவது:
அஜித் சார், மிக நேர்மையானவர். அதேபோல் உறுதிகொண்டவர். ஒரு விஷயத்துல முடிவு எடுக்கும்போது, ‘நாம செய்றது சரியா, தப்பா’னு பாப்பார். சரின்னு தோணுச்சா, எதுக்காகவும், யாருக்காகவும் பின்வாங்கமாட்டார். இன்னிக்கி மட்டுமில்ல, அப்பவே அப்படித்தான் இருந்தார் அஜித்.
‘காதல்கோட்டை’ படத்துக்கு முன்னால, ‘வான்மதி’ படம் பண்ணினார். அதுவும் நான் தயாரிச்ச படம்தான். டைரக்டர் அகத்தியன் சார், ‘காதல்கோட்டை’ கதை சொல்லும்போதே, அஜித் ஹீரோவா நடிச்சா நல்லாருக்கும்னு தோணுச்சு. டைரக்டரும் அவரைத்தான் நினைச்சிருந்தார்.
அந்த அழகு, இளமை, சிரிப்பு, கவர்ச்சி, ஈர்ப்பு, லேசா முகத்துல இருக்கற சோகம்... எல்லாமே அந்தக் கேரக்டருக்கு அஜித்துதான் பொருத்தமா இருக்கும்னு முடிவு பண்ண வைச்சுச்சு.
அந்தசமயத்துல, அஜித்சார் எங்களோட பல கோயில்களுக்கு வந்திருக்கார். சபரிமலை கோயிலுக்குப் போயிருக்கோம். ‘காதல்கோட்டை’ படத்துல கடைசில அந்த ரயில்வே ஸ்டேஷன்லயும் ஹீரோ ஹீரோயின் சேரமாட்டாங்க. அதோட படம் முடிஞ்சிருது’ன்னு அகத்தியன் சார் சொன்னார். படத்தோட கடைசி அரைமணி நேரம் சேரணுமே சேரணுமேன்னு ஆடியன்ஸ் தவிச்சிட்டிருக்கும் போது, கடைசில சேரவே மாட்டாங்கன்னு சொன்னா நல்லாருக்காது. ரெண்டுபேரும் சேரணும். அப்படி படம் எடுக்கறதா இருந்தா, நான் படம் எடுக்கிறேன்’னு சொன்னேன். அப்புறமா அகத்தியன் அதுக்கு ஒத்துக்கிட்டார்.
எனக்கும் எங்க நிறுவனத்துக்கும் மிகப்பெரிய அடையாளமே ‘காதல் கோட்டை’தான். சிறந்த படம், நல்ல வசூல் கொடுத்த படம், விருதுகள் தந்த படம், மரியாதை கொடுத்த படம், வாழ்க்கை கொடுத்த படம்னு எங்களுக்கு எல்லாமே இருக்கும் காதல் கோட்டை படத்தை மறக்கவே முடியாது.
திரும்பவும் அஜித் சாரோட சேரணும். படமெடுக்கணும்னுதான் எனக்கு ஆசை. அதுக்காக, கோயில்கோயிலாப் போய் வேண்டிக்கிட்டிருக்கேன். இதான் இப்ப என்னோட வேண்டுதல், ஆசை, பிரார்த்தனை, லட்சியம் எல்லாமே!
இவ்வாறு சிவசக்தி பாண்டியன் தெரிவித்தார்.