உதவி இயக்குநரான அருள்நிதிக்கு, பல முயற்சிகளுக்குப் பிறகு முதல் படம் இயக்கும் வாய்ப்பு அமைகி றது. தொடங்கிய சில நாட்களிலேயே அந்த படமும் கைவிடப்படுவதால், மன உளைச்ச லுக்கு ஆளாகிறார். நண்பர்களுடன் மது பான விடுதிக்கு செல்கிறார். அங்கு, எழுத் தாளரான ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் அறிமுகம் கிடைக்கிறது. போதை அதிகமான நிலை யில் இருவரும், ஷ்ரத்தாவின் அடுக்குமாடி குடியிருப்புக்கு செல்கின்றனர். மறுநாள், அயர்ச்சியோடு கண்விழிக்கும் அருள்நிதி, தான் சோபாவோடு கட்டிப் போடப்பட்டி ருப்பதை உணர்கிறார். மணிக்கட்டில் வெட்டுப்பட்டு ரத்தம் வழிந்த நிலையில், இறந்துகிடக்கிறார் ஷ்ரத்தா. ‘K-13’ என்ற அடுக்குமாடி குடியிருப்பில் ஓர் இரவில் நடக்கும் மரணத்தைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களின் கோர்வைதான் மீதிக் கதை.
மிகவும் ஆர்வம் உள்ள ஒரு விஷயம் மீது படைப்பாளிக்கு ஏற்படும் ஆழமான ஈடுபாடு, என்னவெல்லாம் செய்ய வைக்கும் என்பதை உளவியல் ரீதியாக சொல்ல முனைகிறது இப்படம். அறிமுகம் இல் லாத பெண்ணின் வீட்டுக்கு வந்து நாய கன் சிக்கலில் மாட்டிக்கொள்வது, பின்னர் அங்கிருந்து தப்பிச் செல்வதற்காக தடயங் களை அழிப்பது என த்ரில்லருக்கான அம்சங்களுடன் கதை பயணிக்கத் தொடங் குகிறது. பக்கத்தில் பிணத்தை வைத்துக் கொண்டு நாயகன் அடையும் பதற்றத்தை, பார்வையாளர்களுக்கும் அப்படியே கடத்த முயற்சித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் பரத் நீலகண்டன்.
திரைத்துறையில் கால்பதிக்க முட்டி மோதும் ஒரு இளைஞனின் கதாபாத்தி ரத்தை சிறப்பாக வடிவமைத்திருக்கிறார். ஷ்ரத்தாவின் கதாபாத்திரம் பலவீனம்.
தனக்கான கதைகளைத் தேர்ந்தெடுப் பதில் புத்திசாலித்தனத்தையும், நடிப்பில் முதிர்ச்சியையும் ஒவ்வொரு படத்திலும் வெளிப்படுத்துகிறார் அருள்நிதி. சினிமா எடுக்க 10 ஆண்டுகளாக கனவு காணும் இளைஞன் வேடத்தில் கச்சிதமாக பொருந் துகிறார். படம் முழுவதும் மப்பும், பதற்ற மும், பீதியுமாக இருக்கிறார். சடலமாகக் கிடக்கும் ஷ்ரத்தாவுக்கு முன்னால், தான் மட்டுமே நடிப்பை வெளிப்படுத்தியாக வேண்டும். அந்த இடங்களை நன்கு உணர்ந்து, நடிக்கிறார். சுயசார்பு மிக்க பெண் பாத்திரம், ஷ்ரத்தாவுக்கு நன்கு பொருந்து கிறது. தான் யார்? தனது வேலை என்ன? என்பதை விளக்கிவிட்டு அடுக்குமாடி குடியிருப்புக்கு வருவதோடு ஷ்ரத்தாவின் நடிப்பு முடிந்தாலும், கதை முழுக்க வியாபித்திருக்கிறார். கூரியர் டெலிவரி மேனாக ஒரே காட்சியில் மட்டும் வருகி றார் யோகிபாபு. ஷ்ரத்தாவின் தோழியான காயத்ரி, ரமேஷ் திலக், விஜய்க்கும் பெரிதாக முக்கியத்துவம் இல்லை.
அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைவ தற்கு முன்பு கதாபாத்திரங்களை விவரிக் கும் முதல் அரை மணி நேரக் காட்சிகள் சோர்வு தட்டுகின்றன. 2-ம் பாகத்தில் திரைக்கதைக்காக கொஞ்சம் மெனக்கெட் டிருக்கிறார் இயக்குநர். ஆனால், அவை துரித கதியில் மேலோட்டமாக காட்டப்படு வதால் மனதில் ஒட்டாமலேயே கடந்து போகின்றன. முன்னும் பின்னுமான காட்சிகள் விறுவிறுப்பை குறைக்கின்றன.
காயத்ரி, ஆதிக் ரவிச்சந்திரன் சண்டை போட்டுக்கொள்வது, ஷ்ரத்தா - காயத்ரி பிரிவு ஆகியவற்றுக்கான காரணங்கள் நேர்த்தி. ஆனால், 6 ஆண்டுகளாக பெற்றோரை பிரிந்து ஷ்ரத்தா எதற்காக தனிமையில் வாழ்கிறார்? மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட அருள்நிதியை அவர் ஏன் பின்தொடர்கிறார்? தப்பிக்க வாய்ப்பு இருந் தும் அருள்நிதி அந்த வீட்டில் இருந்து செல்லாதது ஏன்? இதற்கான காரணங்கள் தெளிவாக இல்லை.
த்ரில்லர், அதுவும் கொலையின் மர் மத்தை துப்பறியும் கதையில் எங்கேயும் கோட்டைவிடாதபடி திரைக்கதை அமைக் கப்பட்டாக வேண்டும். ஒவ்வொரு முடிச்சும் குழப்பமின்றி அவிழ்க்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் பார்வையாளரை யோசிக்க விடாமல் அதிர்ச்சிக்கு உள்ளாக்க வேண் டும். வெறும் 104 நிமிடங்கள்தான், குறை வான வசனங்கள்தான் என்றாலும் பார்வை யாளரை மதியழகனாகவே (அருள்நிதி) மாற வைத்து பீதியும், பதற்றமும், பயமும் அடைய வைத்துவிடுகிறது முதல் பாதி. 2-ம் பாதியில் நாயகனின் குழப்பமும் நம்மை தொற்றிக்கொண்டு விடுகிறது.
சாம் சி.எஸ். பின்னணி இசை, படத்தின் பலம். பாடல்கள் ஈர்க்கவில்லை. வீட்டை சுற்றிச் சுற்றிக் காட்டும் அரவிந்த் சிங் ஒளிப் பதிவுக்கு பெரிய வேலை இல்லை. இயக்குநருக்கு இணையான பணியை எடிட் டர் ரூபன் கையாண்டுள்ளார். அதுதான் இறுதிவரை சஸ்பென்ஸ் வெளிப்படாமல் திரைக்கதையை பயணிக்க வைக்கிறது.
‘கதைக்காக எந்த எல்லைக்கும் படைப் பாளி செல்லலாம்’ என்று படத்தில் ஒரு வசனம் வரும். படம் சொல்ல வந்த சங்கதி யும் அதுதான். ஆனால், இதை ஒரு பார்வை யாளன் மனநிலையில் நின்று சொல்லாமல் இயக்குநராகவே இருந்து பல இடங்களில் காட்சிப்படுத்தி உள்ளார் இயக்குநர். அந்த நுணுக்கமான பார்வை, வெகுஜன பார்வை யாளனை திரைக்கதையில் இருந்து அந்நி யப்படுத்திவிடுகிறது. மற்றபடி உளவியல் த்ரில்லரை கொண்டாடும் மனங்களுக்கு K-13 ஒரு நிறைவான அனுபவம்.
அருள்நிதி யார் என்ற ஒரு திருப்பத்தை படத்தின் முடிவில் இயக்குநர் சொல்கிறார். படத்துக்குள் படமாக காட்டப்படும் அது தான் எதிர்பாராத கிளைமாக்ஸ். இது புரியா மல், அந்த திருப்புமுனை காட்சியின்போதே தியேட்டரில் விளக்குகளை ஒளிரவிட்டு விடுகின்றனர். அவர்களை சொல்லி குத்தமில்லை!