மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள முடியாமல் போனதற்கான காரணத்தை, ட்விட்டரில் தெரிவித்துள்ளார் காஜல் அகர்வால்.
இந்தியாவின் பிரதமராக, இரண்டாவது முறையாக நேற்று (மே 30) பதவியேற்றுக் கொண்டார் நரேந்திர மோடி. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பிரமாண்டமான விழாவில், 25 பேர் கேபினர் அமைச்சர்களாகவும், 33 பேர் இணையமைச்சர்களாகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்த விழாவில் கலந்துகொள்ள, வெளிநாட்டுத் தலைவர்கள் உள்பட பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், நடிகர் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உள்பட தமிழகத்திலும் சிலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அரசியல் தாண்டி, சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் எனப் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதில், நேற்று நடந்த விழாவில் 8 ஆயிரம் விஐபிக்கள் கலந்துகொண்டனர். ஆனால், ஒருசிலரால் அந்த விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை. அதில், நடிகை காஜல் அகர்வாலும் ஒருவர்.
தன்னால் ஏன் இந்த விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை என ட்விட்டரில் விளக்கியுள்ளார் காஜல் அகர்வால். அதில், அவர் கூறியிருப்பதாவது:
“அன்புள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு... குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த உங்களின் பதவியேற்பு விழாவுக்கு என்னைக் கனிவுடன் அழைத்தமைக்கு மிக்க நன்றி. உங்களின் அழைப்பை ஏற்றதில் மிகவும் பெருமையும் கவுரவத்தையும் பெற்று, உங்களின் அன்பையும் பெற்றுள்ளேன்.
ஆனால், எனக்கான அழைப்பிதழ் தாமதமாகக் கிடைத்ததால், டெல்லிக்கு குறித்த நேரத்தில் என்னால் வந்துசேர முடியவில்லை. அதை நினைத்து மிகவும் துயரப்படுகிறேன். அனைத்து வளங்களும் சக்தியும் கிடைத்து, உங்களின் ஆட்சி சிறக்கட்டும்.”
இவ்வாறு காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். அத்துடன், தனக்கு வந்த அழைப்பிதழ் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
இதேபோல், மதிய உணவை முடிக்கத் தாமதமானதால் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகிய இருவரும் பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.