தமிழ் சினிமா

நீங்கள் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கையே என்னைத் தொடர்ந்து இயக்குகிறது: சூர்யா நெகிழ்ச்சி

செய்திப்பிரிவு

இன்று ‘என்.ஜி.கே.’ படம் ரிலீஸாகியுள்ள நிலையில், ‘நீங்கள் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கையே என்னைத் தொடர்ந்து இயக்குகிறது’ என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் சூர்யா.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘என்.ஜி.கே’. நந்த கோபாலன் குமரன் என்பதன் சுருக்கம்தான் ‘என்.ஜி.கே’. இந்தப் படத்தில், ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் வெளியிட்டுள்ளது. பொலிட்டிக்கல் ஆக்‌ஷன் த்ரில்லரான இந்தப் படத்துக்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

தமிழில் உருவாகியுள்ள இந்தப் படம், தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. சூர்யா - செல்வராகவன் - யுவன் கூட்டணி என்பதால், இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. ‘மெர்சல்’ மற்றும் ‘காலா’ படங்களைப் போல் ‘என்.ஜி.கே.’ படத்துக்கும் ட்விட்டர் எமோஜி உருவாக்கப்பட்டது.

படத்தைப் பார்த்த தணிக்கைக்குழு உறுப்பினர்கள், படத்துக்கு யு சான்றிதழ் அளித்துள்ளனர். அத்துடன், தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை விஜய் டிவி கைப்பற்றியுள்ளது.

இன்று (மே 31) உலகம் முழுவதும் ‘என்.ஜி.கே.’ ரிலீஸாகியுள்ள நிலையில், ட்விட்டரில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் சூர்யா. அதில், “அன்பே தவம், அன்பே வரம். வெற்றி, தோல்விகளைக் கடந்து மானசீகமாக என்னை ஏற்றுக்கொண்ட அன்புள்ளங்களே என் வரம். நீங்கள் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கையே என்னைத் தொடர்ந்து இயக்குகிறது. அனைவரையும் மகிழ்வித்து மகிழக் காத்திருக்கிறேன். உங்களுக்கும் இறைவனுக்கும் உள்ளம் நெகிழும் நன்றிகள்” எனத் தெரிவித்துள்ளார் சூர்யா.

‘என்.ஜி.கே.’ படத்தைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘காப்பான்’ படத்தில் நடித்துள்ளார் சூர்யா. வருகிற ஆகஸ்ட் மாதம் இந்தப் படம் ரிலீஸாகும் எனத் தெரிகிறது.

SCROLL FOR NEXT