விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் ஹரீஷ் கல்யாண். ஏற்கெனவே ’சிந்து சமவெளி’ ’பொறியாளன்’ ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் ’பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் மூலமே பரவலாக அறியப்பட்டார்.
அதே பிக்பாஸ் நிகழ்ச்சியின் சக போட்டியாளரான ரைசா உடன் இவர் இணைந்து நடித்த ‘பியார் பிரேமா காதல்’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ’இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்நிலையில் ஹரீஷ் கல்யாண நடிக்கும் அடுத்த படத்துக்கு 'தனுசு ராசி நேயர்களே'! எனப் பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பு குறித்து இயக்குனர் சஞ்சய் பாரதி கூறும்போது,
"நாம் ஒவ்வொருவருமே நம்முடைய ராசியை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறோம். பத்திரிகைகளிலோ அல்லது காலையில் தொலைக்காட்சியிலோ ஆர்வத்தோடு ராசி பலனை பார்க்கிறோம்.
இந்த படத்துக்கு 'தனுசு ராசி நேயர்களே' என்று பெயரிட காரணம், அது மற்ற ராசிகளுடன் ஒப்பிடுகையில் அதிகமாக கவனத்தை ஈர்க்கிறது.
மேலும் நாயகன் ஹரீஷ் கல்யாண் இந்த குறிப்பிட்ட ராசிக்காரர் தான். இந்த ராசிக்கான அடையாளம் ஒரு வில் அம்பு வைத்திருப்பவர். இது லட்சிய நோக்கத்ததை குறிக்கிறது. இதேபோல், படத்தின் ஹீரோ ஒரு குறிக்கோளுடன் இருப்பவர்”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீ கோகுலம் மூவீஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.