கன்னடப் படமான 'முஃப்தி' தமிழ் ரீமேக்கில் நடிக்க சிம்பு - கெளதம் கார்த்திக் இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள 'மாநாடு' படத்தில் நடிக்கிறார் சிம்பு. இதற்காக இங்கிலாந்து நாட்டில் தங்கி உடலைக் குறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். ஏப்ரல் 25-ம் தேதி சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சிம்பு நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம். இப்படம் கன்னடத்தில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற 'முஃப்தி' படத்தின் ரீமேக்காகும். இதில், ஸ்ரீமுரளி நடித்த கதாபாத்திரத்தில் கெளதம் கார்த்திக்கும், ஷிவ ராஜ்குமார் நடித்த கதாபாத்திரத்தில் சிம்புவும் நடிக்கவுள்ளனர்.
'முஃப்தி' இயக்குநரான நரதனே தமிழிலும் இயக்குகிறார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இருவருடனும் இணைந்து நடிக்கவுள்ளவர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. கன்னடத்தில் வன்முறைக் காட்சிகள் அதிகமாக இருக்கும். அதனை மட்டும் தமிழில் கொஞ்சம் குறைக்க படக்குழு முடிவு செய்துள்ளது.
எப்போது படப்பிடிப்பு உள்ளிட்ட விவரங்களை விரைவில் அறிவிக்கவுள்ளது ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம். 'மாநாடு', 'முஃப்தி' ரீமேக் மட்டுமல்லாது, ஹன்சிகாவின் 50-வது படமான 'மஹா'விலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சிம்பு.