தமிழ் சினிமா

‘காலா’, ‘பரியேறும் பெருமாள்’ படங்களைப் பாராட்டிய அனுராக் கஷ்யப்

செய்திப்பிரிவு

ரஜினி நடிப்பில் வெளியான ‘காலா’ படத்தைப் பாராட்டியுள்ளார் பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப்.

பாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் அனுராக் கஷ்யப். நயன்தாரா நடிப்பில் வெளியான ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனாக நடித்தார். அவர் நடித்துள்ள ஒரே தமிழ்ப்படம் இது.

இந்நிலையில், இயக்குநர் பா.இரஞ்சித்தைச் சந்திக்க விரும்பிய அனுராக், மும்பைக்கு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று மும்பை சென்ற பா.இரஞ்சித்துக்கு, விருந்து அளித்து மகிழ்ந்துள்ளார். அப்போது, பா.இரஞ்சித் இயக்கிய ‘காலா’, தயாரித்த ‘பரியேறும் பெருமாள்’ படங்கள் குறித்து சிலாகித்துப் பேசியுள்ளார் அனுராக்.

மேலும், “இந்திய அளவில் தலித் அரசியலை வெளிப்படையாகவும் நேர்மையாகவும் துணிச்சலாகப் பேசக்கூடிய படைப்பாளியான உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்” என்று அந்தச் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார் அனுராக்.

இதுகுறித்துப் பேசிய பா.இரஞ்சித், “அனுராக் உடனான சந்திப்பு, உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருந்தது. ‘காலா’, ‘பரியேறும் பெருமாள்’ படங்கள் குறித்து அவர் பேசியது. நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கூடிய விரைவில் சேர்ந்து பணியாற்றுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது பழங்குடி மக்களின் தலைவர் பிர்சா முண்டாவின் வாழ்க்கையைப் படமாக்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார் பா.இரஞ்சித். அத்துடன், தன்னுடைய ‘நீலம் புரொடக்‌ஷன்ஸ்’ சார்பில் இரண்டு படங்களையும் தயாரித்து வருகிறார்.

SCROLL FOR NEXT