பேட்டிகளை மிகவும் கவனமாகக் கையாள்வது ஏன் என்று சிவகார்த்திகேயன் பதிலளித்துள்ளார்
ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'Mr.லோக்கல்' மே 17-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் நயன்தாரா, சதீஷ், யோகி பாபு, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
'Mr.லோக்கல்' படத்தைத் தொடர்ந்து 'ஹீரோ', 'விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள படம்', 'பாண்டிராஜ் இயக்கவுள்ள படம்' ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன்.
நாயகனாக அறிமுகமாகும் போது சிவகார்த்திகேயன் அளித்த பேட்டியை விட, இப்போது அளிக்கும் பேட்டிகளில் அதிக கவனத்தைக் கையாள்கிறார். இந்த மாற்றம் தொடர்பான கேள்விக்கு, 'தி இந்து' நாளிதழுக்கு சிவகார்த்திகேயன் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
''நான் விளையாட்டாகச் சொல்லும் விஷயங்கள் எல்லாம் எழுத்தில் படிக்கும் போது அப்படியே எடுத்துக் கொள்ளப்படாமல் போகலாம். அதனால் முன்பு பேசியது போல யோசிக்காமல் பேச முடியாது என நினைக்கிறேன். இப்போது நான் சொல்லும் எல்லா விஷயங்களும் ஆராயப்படுகின்றன. ஏன் இதைப் பேசினார் என்ற கேள்வி வருகிறது. அதனால்தான் கவனமாக இருக்கிறேன்''.
இவ்வாறு சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.