மணிரத்னம் தயாரிப்பில் உருவாகும் 'வானம் கொட்டட்டும்' படத்தின் ஷூட்டிங் ஜூலையில் தொடங்கப்படும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
'செக்கச்சிவந்த வானம்' படத்தைத் தொடர்ந்து, 'பொன்னியின் செல்வன்' கதையைப் படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் இயக்குநர் மணிரத்னம். இதற்காக பல்வேறு முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, தன்னுடைய தயாரிப்பில் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 'வானம் கொட்டட்டும்' என்ற தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை 'படைவீரன்' படத்தின் இயக்குநர் தனா இயக்குகிறார்.
நாயகனாக விக்ரம் பிரபு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நாயகியாக மடோனா செபாஸ்டியனும், விக்ரம் பிரபுவுக்கு தங்கையாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷையும் ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு. இப்படத்தின் கதை - வசனத்தை மணிரத்னமும், தனாவும் இணைந்து எழுதி வருகிறார்கள்.
'96' படத்தின் இசை மூலம் கவனம் ஈர்த்த கோவிந்த் வசந்தா இசையமைக்கவுள்ளார். பிரீத்தா ஒளிப்பதிவு செய்ய, கலை இயக்குநராக அமரன் பணிபுரியவுள்ளார். இதன் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்கி நடைபெறவுள்ளது.
இக்கதையில் முதலில் ஜீ.வி.பிரகாஷ் நடிப்பதாக இருந்தது. தற்போது அவருக்குப் பதிலாக விக்ரம் பிரபு நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.