தமிழ் சினிமா

வலியால் துடிக்கப் போகிறோம்: மகேந்திரனின் மகன் உருக்கம்

ஸ்கிரீனன்

மகேந்திரனின் உடல் நல்லடக்கத்துக்குப் பிறகு, அவரது மகன் வெளியிட்ட ட்விட்டர் பதிவு மிகவும் உருக்கமாக உள்ளது.

'முள்ளும் மலரும்', 'ஜானி' உள்ளிட்ட மறக்க முடியாத படங்களைக் கொடுத்த இயக்குநர் மகேந்திரன், உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 79.

மகேந்திரனின் மறைவு, தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பாகக் கருதப்படுகிறது. இயக்குநர் மகேந்திரன் உடல்நிலை மோசமானதில் இருந்தே, தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் குறித்த பதிவுகளை வெளியிட்டு வந்தார் மகன் ஜான் ரோஷன்.

தனது அப்பா காலமானதையும் கவலையுடன் பகிர்ந்தார். நேற்று (ஏப்ரல் 2) மாலை மகேந்திரனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இரவில் "அப்பா... இனி நீங்கள் கால் வலியில் துடிக்கப் போவதில்லை. முதுகு வலியில் கஷ்டப்படப் போவதில்லை. ஆனால், வாழ்நாள் முழுவதும் நீங்கள் எங்களுடன் இல்லாத வலியில் நாங்கள் துடிக்கப் போகிறோம்" என்று பதிவிட்டுள்ளார் ஜான் ரோஷன்.

தமிழ்த் திரையுலகில் ஜான் ரோஷனும் இயக்குநராக இருக்கிறார். விஜய் நடிப்பில் வெளியான 'சச்சின்' படம் மூலமாகவே அவர் இயக்குநராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. மகேந்திரனுக்கு நேரிலும், சமூக வலைத்தளதிலும் அஞ்சலி செலுத்திய போது ஜான் ரோஷனுக்கு அனைவரும் ஆறுதல் கூறினார்கள்.

SCROLL FOR NEXT