தமிழ் சினிமா

ரஜினியுடன் இணைகிறாரா மகேஷ்பாபு?

ஸ்கிரீனன்

தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு உடன் இணைந்து நடிக்க ரஜினி சம்மதம் தெரிவித்து இருப்பதாக தயாரிப்பாளர் சூர்யநாராயணா தெரிவித்துள்ளார்.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 'லிங்கா' படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. அதனைத் தொடர்ந்து ரஜினி நடிக்கவிருக்கும் படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், மகேஷ்பாபு இணைந்து ஒரு படத்தில் நடிக்க ரஜினி சம்மதம் தெரிவித்து இருக்கிறார் என்று தயாரிப்பாளர் சூர்யநாராயணா தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் ரஜினியுடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து சூர்யநாராயணா அளித்துள்ள பேட்டியில், "எனது கோரிக்கையை ரஜினிகாந்த் ஏற்றுக் கொண்டார். ஈராஸ் நிறுவனத்துடன் செய்து கொண்ட இரண்டு பட ஒப்பந்தம் முடிந்தவுடன், மகேஷ்பாபு உடன் ரஜினி நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கும்" என்று கூறியுள்ளார்.

'ராம் ராபர்ட் ரஹிம்', 'மகா குரு' உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர் சூர்யநாராயணா. இவர் மகேஷ்பாபுவின் அப்பாவான கிருஷ்ணாவின் மைத்துனர் ஆவார். அப்பா கிருஷ்ணாவை போன்றே தானும் ரஜினியுடன் நடிக்க இருப்பதற்கு மகேஷ்பாபுவும் சம்மதம் தெரிவித்துள்ளார். ரஜினி, சூர்ய நாராயணா சந்திப்பிற்கு ஏற்பாடுகள் செய்து கொடுத்திருக்கிறார் கேதிரெட்டி.

தற்போது ரஜினி நடித்து வரும் 'லிங்கா' படத்தின் இசை தீபாவளி அன்றும், படத்தினை ரஜினி பிறந்த நாளான டிசம்பர் 12-ஆம் தேதியும் வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள்.

SCROLL FOR NEXT