கன்னடத்தில் வெளியான ‘சிவலிங்கா’ திரைப்படம் தந்த வரவேற்புக்குப் பிறகு கன்னடம் மற்றும் மலையாளத் திரையுலகில் பரபரப்பாகிவிட்டார், வேதிகா. தற்போது ‘காஞ்சனா 3’ திரைப்படம் மூலம் மீண்டும் தமிழுக்குத் திரும்பியிருக்கிறார். அவருடன் ஒரு சந்திப்பு:
‘முனி’ படத்தில் நடித்தவர் நீங்கள். 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு திகில் படம். ‘காஞ்சனா 3’ அனுபவம் எப்படி?
‘முனி’ படத்தில் நடித்தபோது எனக்கு 16 வயது. அப்போது பெரிதாக விவரம் எதுவும் தெரியாது. இருந்தபோதிலும் திகில், திரில்லர்னு ஒரு ஆர்வத்துடன் நடித்தேன். ராகவா லாரன்ஸ் ஒரு கதையை விளக்கும்போதே நம்பிக்கையை ஏற்படுத்துவார். திரும்பவும் இப்போது மீண்டும் கலகலப்பான திகில் களம்.
படத்தில் நீங்கள்தான் பேயா?
கம்பெனி ரகசியத்தை எப்படிங்க பட்டுன்னு சொல்லிட முடியும்? இப்படத்தில் என்னோட கதாபாத்திரம் ரொம்ப புதிதாக இருக்கும். ‘பரதேசி’, ‘காவியத் தலைவன்’ படங்களைப் போல இதுவும் கவனத்தை ஈர்க்கும். இப்படம் காமெடி, சென்டிமென்ட், திரில்லர், திகில்னு எல் லாமும் கலந்த ஒரு பொழுதுபோக்குக் கலவை.
தமிழில் கவனம் பெற்ற சில கதாபாத்திரங்களை ஏற்றவர், நீங்கள். தொடர்ந்து இங்கேயே கவனம் செலுத்தவில்லையே, ஏன்?
கன்னடம் மற்றும் மலையாளத்தில் அடுத் தடுத்து அமைந்த வெற்றிப்படங்கள்தான் என்னை வேறு எங்கேயும் செல்லவிடாமல் செய்தன. ‘சிவலிங்கா’ படம் பிளாக் பஸ்டர் பட்டியலில் சென்றதும் என்னை திக்குமுக்காட வைத்தது. அங்கேயே தொடர்ச்சியாக அடுத்தடுத்து படங் களில் நடிக்க வேண்டிய சூழலுக்கு சென்றேன். அதேமாதிரி மலையாளத்தில் திலீப் சார், பிருத்விராஜ் படம்னு அடுத்தடுத்து வெற்றி படங்களாக அமைந்தன. மற்றபடி எந்தக் காரணமும் இல்லை. இதோ இப்போது ‘காஞ்சனா 3’ படத்துக்குப் பிறகு அடுத்தடுத்து 2 நேரடி தமிழ் படங்கள் நடிக்க உள்ளேன். அதுவும் நிச்சயம் கவனிக்கப்படும்.
ஹிந்தியில் அறிமுகமாகிறீர்கள் என்ற செய்தி வந்ததே?
மலையாளத்தில் ‘த்ரிஷ்யம்’ திரைப்படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகிறார். அந்தப் படத்தில்தான் நானும் நாயகியாக அறிமுகமாகிறேன். திரில்லர் களம். பிடித்த கதை. உடனே சம்மதித்தேன். இவற்றை யெல்லாம்விட பாலிவுட் உலகம் எனக்கு புதிது. அங்கே உள்ள சினிமா வாழ்வியலை முதலில் கிரகிக்க வேண்டும். அதுக் காகவும் காத்திருக்கிறேன்.
நாயகியை மையமாக வைத்து உருவாகும் கதைகளைத் தொடுவதற்கு வேதிகா சற்று யோசிப்பதாகக் கூறப்படுகிறதே?
ஹீரோ அல்லாத நாயகியை மையமாகக் கொண்ட கதைகளில் நடித்தால்தான் ஒரு நாயகி கவனம் ஈர்க்கப் படுவார் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஹீரோ நடிக்கும் படத்தில் நானும் டைட்டில் ரோல் ஏற்று நடித்த படங்களும் இங்கே உண்டு. தற்போது ஹீரோவுடன் இணைந்து நடிக்கும் படங்களில் பிஸியாக இருக்கிறேன். அதனால்தான் என்னால் அந்த மாதிரி கதைகள் கேட்க முடிவதில்லை. ஹீரோயினை மையம் கொண்ட படத்தில் நிச்சயம் நானும் நடிப்பேன். அதற்கு ஏற்றமாதிரி கதைகளும், கதைக் குழுவும் அமைய வேண்டும். அதுக்காக நானும் காத்திருக்கிறேன். அதேபோல வெப் சீரீஸ் வாய்ப்புகளும் நிறைய வருகின்றன. எனக்கு அதிலும் கவனம் செலுத்த ஆர்வம் உண்டு. சர்வதேச அளவில் அடித்தளம் அமைக் கும் வெப் சீரீஸ் அமைந்தால் பார்க்கலாம்.
வாசிப்பு, எழுத்து என கிரியேட்டிவ் ஆர்வம் உள்ள நடிகை நீங்கள். விரைவில் உங்களை ஒரு ஃபிலிம் மேக்கராக பார்க்க முடியுமா?
இப்போது பாலிவுட்டில் தடம் பதித்து விட்டேன். அங்கே தொடர்ந்து நடிப்புக்கு நிறைய வாய்ப்பு கள் வருகின்றன. இப்போதைக்கு நடிப்பைத் தவிர வேறு எந்தக் களத் திலும் கவனம் செலுத்தப் போவ தில்லை.