நடன இயக்குநர் மெல்வின் லூயிஸைக் காதலித்து வருவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார் நடிகை சனாகான்.
தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சனாகான். தமிழில் 'சிலம்பாட்டம்' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். 'தம்பிக்கு எந்த ஊரு', 'பயணம்' உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும், சில தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார்.
பின்பு, இந்தியில் சில படங்களில் நடிக்கத் தொடங்கினார். 'ஜெய் ஹோ', 'டாய்லெட்: ஏக் ப்ரேம கதா' உள்ளிட்ட சில படங்களில் கவுரவ கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போது நடன இயக்குநர் மெல்வின் லூயிஸைக் காதலித்து வருவதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார் சனாகான்.
நேற்று (ஏப்ரல் 26) மெல்வின் லூயிஸுக்குப் பிறந்த நாள். இதனை முன்னிட்டு அவருடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, "உன்னைச் சந்திக்கும் வரை யாரையும் என்னால் இவ்வளவு நேசிக்க முடியும் என்பது எனக்குத் தெரியாது. சிலர் வாழ்நாள் முழுவதும் தேடும் ஒன்றை நான் உன்னிடத்தில் கண்டேன்.
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் நான் உனக்காக உருகுகிறேன். என்னை நீ சிறந்த மனிதியாக மாற்றுகிறாய். உன்னிடமிருந்து ஒவ்வொரு நாளும் நிறைய நல்ல விஷயங்களை நான் கற்றுக்கொண்டிருக்கிறேன்.
உன் மீது எனக்கிருக்கும் அன்பை விவரிக்க வார்த்தைகள் போதாது. என் வாழ்வில் நீ இருப்பது என் பெரிய அதிர்ஷ்டம். என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. எப்போதும் உன்னைக் காதலிக்கிறேன். பிறந்த நாள் வாழ்த்துகள்.
உன்னை அறியாமல் நீ செய்த லட்சக்கணக்கான விஷயங்களால் நான் உன் மீது காதல் கொண்டேன். என் வாழ்க்கையில் நான் சரியாகச் செய்த ஒரு செயல் என்றால் அது என் இதயத்தை உனக்குக் கொடுத்ததுதான்." என்று தெரிவித்துள்ளார் சனாகான்.
மும்பையில் நடனப் பள்ளி ஒன்றை நடத்தி வருபவர் மெல்வின் லூயிஸ். பல்வேறு பாலிவுட் பிரபலங்களுக்கு நடனப் பயிற்சியும் அளித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது