'காஞ்சனா 3' படத்துக்கு வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு இருப்பதைத் தொடர்ந்து, 'காஞ்சனா 4' படத்துக்காக ஒப்பந்தமாகிவிட்டார் லாரன்ஸ்
ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்து, தயாரித்துள்ள படம் 'காஞ்சனா 3'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள இப்படத்தில் கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, வேதிகா, ஓவியா, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஏப்ரல் 19-ம் தேதி வெளியான இப்படம், வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால், விமர்சகர்கள் பலரும் இப்படத்தை ஆதரிக்கவில்லை. விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் 'காஞ்சனா 3' வசூலால் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். குடும்பம் குடும்பமாக வந்து ரசிக்கிறார்கள் என்று பல திரையரங்கு உரிமையாளர்கள் புகைப்படத்துடன் தங்களது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தின் 4-ம் பாகத்தை இயக்கி, நடிக்க ஒப்பந்தமாகிவிட்டார் லாரன்ஸ். சன் பிக்சர்ஸ் நிறுவனமே இதனையும் முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்கவுள்ளது. 'காஞ்சனா 3' தெலுங்கிலும் வெற்றி பெற்றிருப்பதால், அங்கு வெற்றி விழாவை முடித்து சென்னை திரும்பியுள்ளார் லாரன்ஸ்.
தற்போது 'காஞ்சனா' இந்தி ரீமேக்கில் கவனம் செலுத்தவுள்ளார லாரன்ஸ். அக்ஷய் குமார் நடிக்கவுள்ள இப்படத்தின் பணிகளை முழுமையாக முடித்துவிட்டு, 'காஞ்சனா 4' பணிகளைத் தொடங்கவுள்ளார்.
ஒவ்வொரு 'காஞ்சனா' படத்தின் பாகத்தையுமே பொருட்செலவு ரீதியில் அதிகரித்து வருகிறார் லாரன்ஸ். அதேபோல் 'காஞ்சனா 4' பாகத்தை 3டி தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவாக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.