கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ‘தறி’ சீரியலில் நாயகி அன்னலட்சுமியாக நடிக்கும் ஸ்ரீநிதி மலையாள பூமியில் இருந்து தமிழுக்கு வந்திருக்கிறார்.
காஞ்சிபுரம் வாழ்வியலையும், அங்கே பிரதான தொழிலாக விளங்கும் நெசவையும் மையமாகக்கொண்ட இந்தத் தொடரில் நடித்து வரும் அனுபவம் குறித்து ஸ்ரீநிதியிடம் கேட்டபோது ‘‘இந்த மாதிரி ஒரு நடிப்பு அனுபவம் அவ்ளோ சிக்கிரம் எல்லோருக்கும் அமையாது. எனக்கு சொந்த ஊர் திருவனந்தபுரம். இப்போ இந்த ‘தறி’ சீரியலுக்காக தமிழ்நாட்டிலேயே தங்கிவிட்டேன். ஷாப்பிங் போனால் விதவிதமான பட்டுப் புடவைகளை பார்த்து ரசிப்போம்.
அதில் சிலவற்றை வாங்கவும் செய்வோம். ஆனால் இந்தத் தொடருக்காக காஞ்சிபுரம் வந்தபோதுதான் அந்த ஊர் மக்கள் நெசவுத் தொழிலை கடவுளாக நினைப்பது தெரிய வந்தது. வந்த ஆரம்பத்தில் எனக்கு தறி நெசவு பற்றியெல்லாம் எதுவும் தெரியாது. இப்போ எனக்கு அதெல்லாம் பக்காவாக அத்துபடியாயிற்று. அந்த அளவுக்கு அந்த ஊர் மக்கள் பயிற்சி கொடுக்குறாங்க. ஒரு பாரம்பரியமான விஷயத்தை மக்களிடம் திரும்பக் கொடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் தொடங்கியிருக்கிற சீரியல் இது.
அதற்குள்ளே ஒரு வாழ்வியல், கலாச்சாரம், பண்பு, நேசம், அன்பு என கிளை படர்ந்து தொடர் பயணிக்கிறது. அதுவும் நிஜ வாழ்க்கையில் நான் எப்படி குழந்தைத்தனமாக இருக்கிறேனோ, அதே மாதிரி கதாபாத்திரம் எனக்கு அமைந்த தொடர் இது. அதனாலே இப்போதைக்கு இந்த தொடரில் அன்னலட்சுமியாக சில மாதங்களுக்கு வாழ்வோம். வேறு புதிய சீரியல், படம் பற்றி யோசிக்கவே தோணவில்லை!’’ என்றார்.