ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால், வேறொரு நாயகனுடன் இணைந்து 'தீமைதான் வெல்லும்' படத்தை உருவாக்கவுள்ளார் சந்தோஷ்.
'ஹர ஹர மஹாதேவகி', 'இருட்டு அறையில் முரட்டு குத்து', 'கஜினிகாந்த்' ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார். இதில் 'ஹர ஹர மஹாதேவகி', 'இருட்டு அறையில் முரட்டு குத்து' ஆகிய படங்களுக்கு கடுமையான எதிர்ப்பு வந்தாலும், வசூல் ரீதியில் வெற்றி பெற்ற படங்களாக அமைந்தன.
அவ்விரண்டு படங்களில் இணைந்து பணிபுரிந்த சந்தோஷ் பி.ஜெயக்குமார் - கவுதம் கார்த்திக் இருவரும் மீண்டும் இணைய 'தீமைதான் வெல்லும்' படம் அறிவிக்கப்பட்டது. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க முன்வந்தது. இதில் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு குறித்து பல விளம்பரங்களும் வெளியாகின.
தற்போது இப்படம் கைவிடப்பட்டுள்ளது. தயாரிப்பு நிறுவனத்துக்கும், இயக்குநர் சந்தோஷுக்கும் ஏற்பட்ட மனகசப்பால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் 'தீமைதான் வெல்லும்' கதையை வேறொரு தயாரிப்பாளர், நாயகன் ஆகியோரிடம் சொல்லி படம் இயக்கவுள்ளார்.சந்தோஷ். இது தொடர்பான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
கவுதம் கார்த்திக் நடிப்பில் அடுத்ததாக 'தேவராட்டம்' படம் வெளிவரவுள்ளது. அதனைத் தொடர்ந்து 'செல்லப் பிள்ளை' என்ற படத்தில் நடித்து வருகிறார் கவுதம் கார்த்திக்.