தமிழ் சினிமா

திரை விமர்சனம்- உறியடி 2

செய்திப்பிரிவு

செங்கதிர்மலை கிராமத்தைச் சேர்ந்த லெனின் விஜய்யும் (விஜயகுமார்) அவரது இரு நண்பர்களும் கெமிக் கல் இன்ஜினீயரிங் பட்டதாரிகள். லண்ட னில் வாழும் பணக்கார முதலாளியான ராஜ் பிரகாஷுக்கு சொந்தமான இங்குள்ள ‘பாக் ஸினோ’ உரத் தயாரிப்பு தொழிற்சாலையில் பணிக்கு சேர்கிறார்கள். அங்கு மருத்துவராகப் பணிபுரியும் விஸ்மயாவுக்கும் விஜயகுமாருக் கும் காதல் மலர்கிறது. மோசமான பராமரிப்பு நிலையில் உள்ள அந்தத் தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் ‘எம்.ஐ.சி’ (மீத்தைல் ஐஸோ சயனைட்) என்ற அபாயகரமான ரசாயனம் கலந்த தண்ணீர் ஒருவர் மீது தெறித்தால் அவரது உயிர் போய்விடும் என்ற ஆபத்து நிலவுகிறது.

விஜயகுமாரின் நண்பர் ஒருவர் இவ்வாறு உயிரிழக்கிறார். ‘எம்.ஐ.சி’ ரசாயனம் தண்ணீரில் கலந்தால் மட்டுமல்ல; காற்றாக வெளியானாலும் அதை சுவாசிப்பவர்களின் உயிருக்கு ஆபத்து என்பது தெரியவருகிறது. இதையடுத்து, ‘பாக் ஸினோ’ தொழிற்சாலையை உடனடியாக மூட வேண்டும் என்ற போராட்டத்தை விஜயகுமா ரும் அவரது நண்பரான சுதாகரும் முன்னெடுக் கிறார்கள். ஆனால், ராஜ் பிரகாஷ் உள்ளூர் எம்.பியான தமிழ்க் குமரனுக்கும் அவரை எதிர்க்கும் சாதிக் கட்சித் தலைவரான செங்கை குமாருக்கும் பணம் கொடுத்து தனது தொழிற் சாலைக்கு எதிரான போராட்டத்தை மழுங் கடிக்கிறார்.

இந்நிலையில் தொழிற்சாலையில் இருந்து திடீரென்று வெளியேறும் ரசாயன நச்சுக் கலந்த காற்று ஊர் மக்கள் பலரது உயிரைப் பறிக்கிறது. இன்னும் பலருக்கு கடுமையான நோய்களும் ஏற்படுகின்றன. இதைத் தொடர்ந்து ‘பாக்ஸினோ’ ஆலையின் முதலாளி ராஜ் பிரகாஷை தண்டிக்கக் கோரியும் தங்கள் இழப்புகளுக்கு நீதி கேட்டும் போராட ஊர் மக்கள் திரள்கிறார்கள். லாபவெறிகொண்ட பன்னாட்டு நிறுவன முதலாளி, ஊழலில் புரளும் ஆளும்கட்சி எம்.பி, சாதி உணர்வைத் தூண்டி அதன் மூலம் பதவிக்கு வரத் துடிக்கும் சாதிக் கட்சித் தலைவர் ஆகியோரை மீறி அப்பாவி மக்கள் போராட்டம் வென்றதா? அதில் நாயகன் விஜயகுமாரின் பங்கு என்ன என்பதைச் சொல்கிறது படத்தின் மீதிக் கதை.

‘உறியடி’ படத்தை எழுதி, இயக்கி மையப் பாத்திரத்தில் நடித்திருக்கும் விஜயகுமார், முதல் பாகத்தில் சாதி அரசியல் கட்சிகளின் எப்படி வளர்கின்றன என்பதையும், அதன் பின்னால் உள்ள அரசியலையும் சமரச மில்லாமல் துணிச்சலாகப் பதிவு செய்திருந்தார். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சாதிய அரசியல் மட்டுமல்லா மல் பன்னாட்டு நிறுவன முதலாளிகள் அவர் களது லாபவெறிக்குத் துணை போகும் அரசியல்வாதிகளையும் எதிர்த்து சாட்டையைச் சுழற்றியிருக்கிறார். போபால் விஷவாயுக் கசிவு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை ஆகிய உண்மைச் சம்பவங்களின் அடிப்படை யில் இந்தப் படம் எழுதி, இயக்கப்பட்டுள்ளது.

கையில் எடுத்த அனைத்து விஷயங்களையும் சமூக அக்கறையுடன் பதிவு செய்யும் பணியில் வெற்றிபெற்றிருக்கும் இயக்குநர் அவற்றுக்கான தீர்வைச் சொல்வதில் பெரிதும் சறுக்கியிருக்கிறார். நாயகன் கதாபாத்திரத்தின் பெயர் லெனின் விஜய் என்றிருப்பதும். அவரது வீட்டில் மார்க்ஸ், சே குவேரா படங்கள் இருப்பதும், படத்தில் நிறைய தருணங்களில் சிவப்பு நிறம் பயன்படுத்தப்பட்டிருப்பதும் ஒரு படைப்பாளியாக விஜய்க்கு இடது சாரி அரசியலின் மீது ஆர்வம் இருப்பதைக் காண்பிக்கின்றன.

தொழிற்சாலையில் ரசாயனக் கசிவு எப்படி ஏற்படுகிறது என்பதையும் அதன் விளைவுகளையும் தேவைக்கு அதிகமாகவே காட்சிப்படுத்தியிருப்பது ஒரு கட்டத்துக்கு மேல் சலிப்பை ஏற்படுத்துகிறது. தவிர, ரசாயனக் கசிவு தொடர்பான விளக்கங்கள் அனைத்தும் வேதியியல் தெரியாத பார்வையாளர்களுக்குப் புரியாது. இத்தனைக்கும் ‘சாதாரண மக்களுக்கு ரசாயன அறிவியல் தொடர்பான சங்கதிகள் புரியாது’ என்ற ஒரு வசனம் படத்தில் இடம்பெறுகிறது. இயக்குநருக்கு இந்தப் புரிதல் இருந்தும் தானே அந்தத் தவறை எப்படி செய்தார் என்பது விளங்கவில்லை.

இந்தக் குறைகளைத் தாண்டி படத்தில் ரசிக்கத்தக்க விஷயங்களும் கணிசமாக இருக் கின்றன. விஜய்குமாருக்கும் விஸ்மயாவுக்கும் மலரும் காதல் இயல்பானதாகவும் அழகாக வும் இருக்கிறது. தொழிற்சாலையில் எப்போது என்ன நடக்குமோ என்ற பதற்றத்தை கதா பாத்திரங்களுக்கு மட்டுமல்லாமல் பார்வை யாளர்களுக்கும் கடத்துவதில் இயக்குநர் வெற்றிபெறுகிறார். ரசாயனக் கசிவுக்குப் பின் மக்களுக்கு ஏற்படும் இழப்புகள் தொடர்பான பல காட்சிகள் பார்வையாளர்களை உணர்வுபூர்வ மாக ஒன்றவைக்கின்றன. வீரியம் மிக்க வசனங் கள் பல இடங்களில் ரசிக்க வைக்கின்றன.

விஜய்குமார் முதல் படத்தைப் போலவே இந்தப் படத்திலும் நடிப்பில் குறைவைக்க வில்லை. விஸ்மயா அழகாக இருப்பதோடு கதை நகர்வுக்குப் பயன்படும் நாயகி வேடத்துக்கு தேவையானதைத் தருகிறார். நாயகனின் நண்பனாக யூ-டியூப் புகழ் சுதாகர் நல்ல உறுதுணை நடிகராக வரக்கூடும் என்ற நம்பிக்கையைத் தருகிறார். கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது. பாடல்கள் பரவாயில்லை.

மொத்தத்தில் ‘உறியடி 2’ முதல் பாகத்தைப் போலவே சமூக அக்கறை நிரம்பிய படைப்பாக வந்திருக்கிறது. ஆனால் எளிமையான தீர்வும் தேவைக்கு அதிகமாக நீளும் காட்சிகளும் அந்தத் தாக்கத்தை மட்டுப்படுத்துகின்றன.

SCROLL FOR NEXT