நத்தையின் பயணத்தை முன்வைத்து, மறைந்த இயக்குநர் மகேந்திரனுக்குப் புகழாஞ்சலி சூட்டியுள்ளார் 'பரியேறும் பெருமாள்' இயக்குநர் மாரி செல்வராஜ.்
'முள்ளும் மலரும்', 'ஜானி' உள்ளிட்ட மறக்க முடியாத படங்களைக் கொடுத்த இயக்குநர் மகேந்திரன், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 79. இவரது மறைவு, தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பாகக் கருதப்படுகிறது.
மகேந்திரன் மறைவு குறித்து 'பரியேறும் பெருமாள்' இயக்குநர் மாரி செல்வராஜ், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:
நீங்கள் ஒரு நத்தை மகேந்திரன் சார்.
எப்போது வேண்டுமென்றாலும் எளிதில் உடைந்து நொறுங்கக்கூடிய தமிழ் சினிமாவின் ஓட்டைத் தூக்கிகொண்டு, இளையராஜாவின் இசையோடு ஊர்ந்துகொண்டிருந்தீர்கள்.
நத்தை, தன் பயணத்தை எங்கிருந்து தொடங்கியது, அது எங்குபோய் பயணத்தை முடித்தது என்பது யாருக்கும் தெரியாது. பெரும் சுமையைத் தூக்கிகொண்டு, யாரையும் தொந்தரவும் செய்யாமல், தன் பிரபஞ்சத்தைத் தானே கடக்க விரும்பும் நத்தையின் நம் பார்வைக்குட்பட்ட சில நொடி பயணமே நமக்கு சிலிர்ப்பு.
நீங்கள் எப்போதும் போல உங்கள் முட்களின் வழியாகவோ, உங்கள் மலர்களின் வழியாகவோ அல்லது உங்கள் காளி ஆங்காரத்தோடு ஓலமிட்டு ஆடுவானே... அந்தக் கொல்லிமலை வழியாகக்கூட ஊர்ந்துபோங்கள் மகேந்திரன் சார்.
நத்தை போனாலென்ன... நத்தை ஊர்ந்துசென்ற தடம் போதும் மகேந்திரன் சார், ஒரு நத்தையின் ஞானத்தை மற்றவர்கள் கண்டடைய...
மிஸ் யூ மகேந்திரன் சார்.
இவ்வாறு மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.