தமிழ் சினிமா

கடாரம் கொண்டான் வெளியீட்டு தேதி சர்ச்சை: சுதாரித்த படக்குழு

ஸ்கிரீனன்

மே 31-ம் தேதி 'கடாரம் கொண்டான்' ரிலீஸ் என வெளியான தகவல் சர்ச்சையானதால், சுதாரித்துக் கொண்டு படக்குழு விளக்கம் அளித்துள்ளது.

'சாமி ஸ்கொயர்' படத்தைத் தொடர்ந்து ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் உருவாகி வரும் 'கடாரம் கொண்டான்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விக்ரம். கமலின் ராஜ்கமல் நிறுவனம் மற்றும் ட்ரைடென்ட் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் வெளியிடப்பட்ட 'கடாரம் கொண்டான்' டீஸருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படம் எப்போது வெளியாகும் என்று பலரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்க, திடீரென்று 'மே 31 வெளியீடு' என்று ’கடாரம் கொண்டான்’ போஸ்டர் ஒன்று வெளியானது.

இது விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால், செல்வராகவன் - சூர்யா இணைப்பில் உருவாகியுள்ள 'என்.ஜி.கே' படம் மே 31-ம் தேதி வெளியீடு என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

'கடாரம் கொண்டான்' படக்குழுவின் இந்த அறிவிப்பு சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையாகவும் உருவானது. மீண்டும் மோதும் சூர்யா - விக்ரம் என்று பலரும் பதிவிட்டார்கள்.

இதனால் சுதாரித்துக் கொண்டு படத்தின் தயாரிப்பில் ஒருவரான ட்ரைடென்ட் நிறுவனம் தனது ட்விட்டர் பதிவில், "'கடாரம் கொண்டான்' படத்ட்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வெளியீட்டுத் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில்" என்று தெரிவித்துள்ளது.

மேலும், இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வாவும் 'கடாரம் கொண்டான்' படத்தின் டீஸரில் உள்ள விக்ரமின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அப்புகைப்படம் உங்கள் பார்வைக்கு..

அக்‌ஷரா ஹாசன், அபு ஹாசன் உள்ளிட்ட பலர் விக்ரமுடன் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நாயகனாக நடித்தது மட்டுமன்றி, இப்படத்தில் பாடலொன்றையும் பாடியுள்ளார் விக்ரம். 'கடாரம் கொண்டான்' பணிகள் முடிந்துவிட்டதால், பெரும் பொருட்செலவில் தயாராகும் 'மகாவீர் கர்ணா' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விக்ரம்.

SCROLL FOR NEXT