விக்னேஷ் சிவனின் ட்வீட்டால் 'கொலையுதிர் காலம்' படத்தின் வியாபாரம் பாதிக்கப்பட்டு இருப்பதால், வழக்கு தொடர இயக்குநர் சக்ரி டோலட்டி முடிவு செய்துள்ளார்.
சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா, பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கொலையுதிர் காலம்'. படத்தின் தொடக்கத்தில் யுவன் தயாரிப்பாளராக இருந்தார். தற்போது மதியழகன் தயாரித்து வருகிறார். இப்படத்தின் தயாரிப்பு, மற்றும் இசையமைப்பாளர் ஆகிய பொறுப்புகளிலிருந்து யுவன் விலகியுள்ளார்.
இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளோடு பேசினார் ராதாரவி. இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. இதற்கு எதிர்வினையாற்றும் வகையில் நயன்தாராவின் காதலரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த கருத்துகளில் “இந்தப் படத்தை தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் சில ஆண்டுகளுக்கு முன்னரே கைவிட்டுவிட்டனர் என்றே நினைத்தேன். சற்றும் பொருத்தமற்ற நிகழ்ச்சி. தேவையற்ற நபர்கள் கலந்து கொண்டு என்ன பேசுகிறோம் என்று தெரியாமலயே பேசினர்” என்று குறிப்பிட்டார்.
விக்னேஷ் சிவனின் இந்த எதிர்ப்பால், 'கொலையுதிர் காலம்' படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியடைந்தது. ஏனென்றால், கைவிடப்பட்ட படம் என்று குறிப்பிட்டார் விக்னேஷ் சிவன். மேலும், கோடை விடுமுறைக்கு இப்படத்தை வெளியிடலாம் என்று வியாபாரப் பேச்சைத் தொடங்கியது படக்குழு.
இயக்குநர் விக்னேஷ் சிவனின் கருத்துகளை முன்வைத்து, ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு முன் வாங்கிக் கொள்கிறேன் என்று தெரிவித்த பலரும் தற்போது வேண்டாம் என்று விலகிவிட்டார்கள். மேலும், படத்தின் டிஜிட்டல் உரிமையை முன்னணி நிறுவனம் ஒன்று வாங்க முடிவெடுத்தது. தற்போது அந்நிறுவனமும் விலகிக் கொண்டது.
விக்னேஷ் சிவனின் கருத்துகளால் படத்தின் முழு வியாபாரமும் பாதிக்கப்பட்டு இருப்பதால், அவர் மீது வழக்கு தொடர இயக்குநர் சக்ரி டோலட்டி முடிவு செய்துள்ளார். அவரது ட்வீட்டால் ஏற்பட்ட நஷ்டத்தை அவரே அளிக்க வேண்டும் என்று கோரவுள்ளது படக்குழு. வரும் வாரத்தில் இந்த வழக்கு தொடர, தற்போது ஆலோசனையில் இறங்கியுள்ளனர்.