தமிழ் சினிமா

சஹானாவின் கல்விச் செலவை முழுமையாக ஏற்ற சிவகார்த்திகேயன்: இணையத்தில் குவியும் வாழ்த்து

ஸ்கிரீனன்

சஹானாவின் கல்விச் செலவு முழுவதையும் ஏற்றுக்கொண்ட சிவகார்த்திகேயனுக்கு இணையத்தில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

கஜா புயலின் தாண்டவத்தில் பலரும் தங்களுடைய வீடுகளை இழந்தனர். அப்புயலில் தஞ்சாவூர் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. இப்பகுதியின் பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்த சஹானாவின் வீடும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

சமீபத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது. இதில் 600-க்கு 524 மதிப்பெண்கள் எடுத்துள்ளார் சஹானா. அப்பகுதி மக்கள் பாராட்டினாலும், இது குறித்து அரசுப் பள்ளி ஆசிரியரான செல்வம் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

''மின்சாரமில்லாத, கஜா புயலில் விழுந்த குடிசை வீட்டில் வாழ்ந்து கொண்டு மன உறுதியோடு படித்து,நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் 600 க்கு 524 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தஞ்சாவூர் பேராவூரணி அருகே உள்ள பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்த மாணவி சஹானா.#ஊக்கமது_கைவிடேல்'' என்று ஆசிரியர் செல்வம் குறிப்பிட்டு இருந்தார்.

இப்பதிவு வைரலாகப் பரவியது. பலரும் வாழ்த்துகள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து சஹானாவுக்கு மருத்துவம் படிக்க ஆசை என்றும், ஆனால் பண உதவி தேவை என்றும் தொலைபேசி எண்ணோடு ட்வீட்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து உதவிகளும் குவியத் தொடங்கின.

சஹானா குறித்து கேள்விப்பட்ட சிவகார்த்திகேயன், அடுத்து என்ன படிக்க வேண்டுமானாலும் படிக்கட்டும். அதற்கான முழு செலவையும் ஏற்றுக் கொள்கிறேன் என்று உறுதி அளித்துள்ளார். இதனால், அவரது குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சிவகார்த்திகேயனின் நல்ல உள்ளத்தைப் பாராட்டி சமூக வலைதளங்களில் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT