மே மாதம் முதல் 'மாநாடு' படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று இயக்குநர் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்.
'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்துக்குப் பிறகு வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதி ஒதுக்கியுள்ளார் சிம்பு. சுரேஷ் காமாட்சி தயாரிக்கவுள்ள இப்படத்துக்கு 'மாநாடு' என்று தலைப்பிடப்பட்டு முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இப்படத்துக்காக உடல் இழைக்க வேண்டும் என்பதால், இங்கிலாந்து நாட்டுக்கு பயணமானார் சிம்பு. அங்கு உடம்பைக் குறைத்துவிட்டு தம்பி குறளரசனின் திருமணத்துக்காக திரும்பியுள்ளார். குறளரசனின் திருமண வரவேற்பில் சிம்புவை சந்தித்து பேசியுள்ளார் இயக்குநர் வெங்கட்பிரபு
சிம்புவுடன் எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "அவர் திரும்பிவிட்டார். 'மாநாடு' மே மாதம் முதல் தொடக்கம்" என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் வெங்கட்பிரபு. இந்தப் பதிவு சிம்பு ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நாயகியாக கல்யாணி ப்ரியதர்ஷன், எடிட்டராக ப்ரவீன் கே.எல் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். 'மாநாடு' பணிகளுக்கு இடையே, ஹன்சிகாவுடன் 'மஹா' படத்திலும் நடிக்கவுள்ளார் சிம்பு. இவ்விரண்டு படங்களை முடித்துவிட்டு சீமான் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார்.