விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சாந்தனு நடிக்கும் ’இராவணகோட்டம்’ படத்துக்கு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2013-ம் ஆண்டு விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் வெளியான படம் 'மதயானைக் கூட்டம்'. விமர்சன ரீதியாக பலரும் கொண்டாடிய படம். ஆனால் வசூல் ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. கதிர், ஓவியா, கலையரசன், வேல.ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்துக்கு ரகுநந்தன் இசையமைத்திருந்தார்.
'மதயானைக் கூட்டம்' படம் வெளியாகி சுமார் 6 ஆண்டுகள் கழித்து தன் அடுத்த படத்தைத் துவங்கியுள்ளார் இயக்குநர் விக்ரம் சுகுமாரன். இதில் நாயகனாக நடிக்க சாந்தனு ஒப்பந்தமாகியுள்ளார். தொழிலதிபர் கண்ணன் ரவி தயாரிக்கும் இப்படத்துக்கு 'இராவணகோட்டம்' என்று தலைப்பிட்டுள்ளனர். இதை நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் விஜய் தனது புதிய படத்துக்கு வாழ்த்து கூறியிருப்பதாக சாந்தனு தனது மற்றொரு பதிவில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, ’வாழ்த்துக்கள் நண்பா.. தலைப்பு செம்ம’.. காலையில் முதல் வேலையாக இந்த வார்த்தைகள் எனக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஊட்டுகின்றன. மெர்சல் ஆயிட்டேன். உங்களுடைய வாழ்த்துகளுக்கு நன்றி விஜய் அண்ணா.” இவ்வாறு சாந்தனு தெரிவித்துள்ளார்.
சாந்தனு தான் ஒரு தீவிர விஜய் ரசிகர் என்பதை அவ்வப்போது தனது பேட்டிகளிலும், டிவிட்டர் பதிவுகளிலும் குறிப்பிடுவார். தனது திருமணத்தை கூட விஜய் தலைமையில் நடத்தினார். சர்கார் பட பிரச்சினையின்போது தன் தந்தை பாக்யராஜ் சர்கார் கதையை வெளியில் சொன்னதற்காக ட்விட்டரில் விஜய் ரசிகர்களிடம் சாந்தனு மன்னிப்புக் கேட்டிருந்தார். கூடவே சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி தலைவனை மாற்றுகிற கூட்டத்தில் நான் ஒருவன் “இல்லை” என்றைக்கும் விஜய் அண்ணா , எனக்கு விஜய் அண்ணா தான் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் சாந்தனுவின் பட அறிவிப்பு வந்த சில மணி நேரங்களில் விஜய் அவருக்கு வாழ்த்து கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.