வாக்காளர் பட்டியலில் பெயரில்லை என்ற போதிலும், தேர்தல் அதிகாரிகளின் உதவியுடன் தனது வாக்கைப் பதிவு செய்திருக்கிறார் திவ்யதர்ஷினி.
தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 19 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று (ஏப்ரல் 18) தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், வர்த்தகத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாக்களித்து வருகிறார்கள்.
இதில் விஜய் தொலைக்காட்சியின் முன்னணித் தொகுப்பாளரான திவ்யதர்ஷினி தனது வாக்கைப் பதிவு செய்யச் சென்றார். ஆனால், வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லை என்றவுடன், தேர்தல் ஆணையம் உதவியுடன் அதே வாக்குப்பதிவு மையத்தில் தனது வாக்கைப் பதிவு செய்திருக்கிறார்.
இது தொடர்பாக திவ்யதர்ஷினி தனது ட்விட்டர் பதிவில், “காலை 8 மணி அளவில் ஓட்டுப் போடச் சென்றபோது பட்டியலில் எனது பெயர் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டேன். எனக்கு ஓட்டுரிமை வந்த நாளிலிருந்து அதே வாக்குச்சாவடியில் தான் வாக்களித்து வந்துள்ளேன். அதிகாரிகள் வெகுநேரம் தேடி உதவிய பிறகு ஒரு வழியாக எனது ஓட்டைப் போட்டுவிட்டு வந்தேன். அதிகாரிகளுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், நடிகர் ரமேஷ் கண்ணா மற்றும் ரோபோ ஷங்கர் இருவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்பதால் வாக்களிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.