தமிழ் சினிமா

திரை விமர்சனம்: வெள்ளைப்பூக்கள்

செய்திப்பிரிவு

சென்னையில் பணியில் இருந்து ஓய்வுபெறும் காவல் துறை அதிகாரி ருத்ரன் (விவேக்), தன் மகன் அஜய் (தேவ்), மருமகள் ஆலிஸோடு (பெய்க் ஹெண்டர்சென்) வசிக்க அமெரிக்கா செல்கிறார். அமெரிக்கப் பெண்ணான மருமகளுடன் சகஜமாகப் பழக அவரால் முடியாமல் இறுக்கமாகவே இருக்கிறார். அஜய்யுடன் பணியாற்றும் ரம்யாவின் (பூஜா தேவரியா) தந்தை பாரதிதாசன் (சார்லி), ருத்ரனுக்கு நட்பாகிறார். திடீரென்று அவர்கள் வசிக்கும் பகுதியில் சிலர் கடத்தப்படுகிறார்கள்.

கடத்தப்படுபவர்களுக்குள் எந்தப் பொதுவான விஷயமும் இல்லை. அமெரிக்க காவல்துறை விசாரித்துக் கொண்டிருக்கும்போது தனக்குள் இருக்கும் காவல் துறை சிந்தனையால் உந்தப்பட்டு, தன்னிச்சையாகக் கடத்தல்காரனைத் தேடத் தொடங்குகிறார் ருத்ரன். போதை மருந்து கடத்தும் ஓர் இளைஞர் குழுவின் மீது சந்தேகம் வருகிறது.

அவர்களைப் பின்தொடர்கிறார். மறுபுறம் போதைப் பழக்கத்துக்கு அடிமையான ஒருவர், தன் மனைவியையும் மகளையும் வீட்டுக்குள்ளேயே சிறைவைத்துக் கொடுமைப்படுத்துவதும் குழந்தைகளைக் கடத்திச் சில கொடூரமான குற்றங்களைச் செய்வதும் காண்பிக்கப்படுகிறது. படிப்படியாக முடிச்சுகளை அவிழ்க்கும் ருத்ரன், உண்மையான குற்றவாளிகளையும் இந்தக் கடத்தல்களுக்கான காரணத்தையும் கண்டுபிடித்தாரா என்பதே மீதிக் கதை.

தமிழகத்தில் பணிபுரியும் ஒரு காவல் துறை அதிகாரி, அமெரிக்கா மாதிரியான அயல்நாடுகளுக்குச் சென்று புலனாய்வு செய்வதை பல படங்களில் பார்த்திருப்போம்.  இந்த அடிப்படை சட்டகத்தைப் புதிய கோணத்தில், அடுத்தடுத்து திருப்பங்கள், சில இடங்களில் விறுவிறுப்பு என நிறைத்திருப்பது ரசிக்கவைக்கிறது. 

குற்றவாளியையும் குற்றம் நடப்பதற்கான காரணத்தையும் இறுதிகட்டம்வரை மறைத்துவைக்கும் இந்த வகையான கிரைம் த்ரில்லர் படங்களில் இந்த மர்மங்களை பார்வையாளர்கள் ஊகிக்க முடியாமல் பார்த்துக்கொள்வது மிகவும் முக்கியம். அதேபோல் இறுதியில் உண்மையான குற்றவாளியும் குற்றத்துக்கான காரணமும் சொல்லப்படும்போது அது, கதையில் திடீர் திணிப்பாக இல்லாமல் இருக்கவேண்டும். குற்றத்துக்கான காரணமும் குற்றவாளியாகக் காண்பிக்கப்படுபவர் அதைச் செய்திருக்கக்கூடும் என்பதும் ஏற்றுக்கொள்ளும்படி வலுவாக இருக்க வேண்டும். ’வெள்ளைப் பூக்கள்’ படத்தில் இவை மூன்றுமே நிறைவேற்றப்படுகின்றன.

குற்றவாளியைப் பார்வையாளர்கள் ஊகிப்பதைத் தடுப்பதற்காக ஒரு புதுமையான திரைக்கதை உத்தியைப் பயன்படுத்தியிருக்கிறார், படத்தை எழுதி இயக்கியுள்ள விவேக் இளங்கோவன். அதுவும் நன்றாகவே இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்குள் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருப்பது, யார் செய்திருக்கக்கூடும் என்பதில் ஒன்றுக்கு மேற்பட்ட தரப்பினர் மீது சந்தேகம் வருவது இந்த முடிச்சுகளை மையக் கதாபாத்திரம் ஒவ்வொன்றாக அவிழ்த்து முன்னேறுவது ஆகியவை திரைக்கதை விறுவிறுப்பாக நகர உதவுகின்றன.

ருத்ரன் தன் மனதுக்குள் அசைபோட்டுப் பார்க்கும் விஷயங்களை காட்சிகளாகக் காண்பிக்கும் திரைக்கதை உத்தியும் ரசிக்க வைக்கிறது. நம் சமகாலத்தின் மிக மோசமான குற்றத்தைப் பற்றி விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் படத்தை முடித்திருப்பது பாராட்டுக்குரியது.

ஆனால் முதல் பாதியில் குற்றம் நடக்க நீண்ட நேரம் ஆகிறது. விசாரணையும் மிக மெதுவாக நகர்கிறது. எனவே த்ரில்லர் படத்துக்குத் தேவையான வேகமும் விறுவிறுப்பும் குறைவாக உள்ளன. இரண்டாம் பாதியில் இந்தக் குறை ஓரளவு சமன்படுத்தப்படுகிறது. ஆனால் ருத்ரனின் விசாரணையில் சில லாஜிக் ஓட்டைகள் இருக்கின்றன. தனிநபராக அவர் குற்றம் நடந்த இடத்துக்கெல்லாம் சர்வசாதாரணமாகச் சென்று போலீஸிடம் பிடிபட்டால், ஏதாவது சாக்கு சொல்லி தப்பிப்பதையும் ஏற்க முடியவில்லை.

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை  இன்றைக்கு சர்வதேச அளவில் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் அதிகமாகவே நடந்து வருகிறது. அப்படி இருக்கையில் இந்தக் திரைக்கதையின் களத்தை இங்கே நம் மண்ணிலேயே பிரதிபலிக்கச் செய்திருக்கலாம். அமெரிக்கா மற்றும் அங்கே உள்ள புதிய கதாபாத்திரங்கள் எனச் சுழலும்போது சில இடங்களின் காட்சிகள் அன்னியமாகத் தெரிகின்றன.  அதிலும் விவேக், சார்லி தவிர மற்ற கதாபாத்திரங்கள் பெரும்பாலும் புதியவர்களாக இருப்பதால் முழுமையாக ஒன்ற முடியாமல் போகிறது.

இதுவரை காமெடி போலீஸாக மட்டுமே நாம் பார்த்துள்ள விவேக்,இந்தப் படத்தில் அறிவுக்கூர்மையும் உடல்வலுவும் மிக்க காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். அமெரிக்கா செல்லும் தமிழக காவல் துறை அதிகாரி அங்குள்ள சூழல்களையும் குற்றவாளிகள் மனநிலையையும் ஆராய்ந்து துப்பறிவது, நுணுக்கமான வியூகங்களை அமைப்பதுமான காட்சிகளுக்கு விவேக் தனது முதிர்ச்சியான நடிப்பால் கூடுதல் பலம் சேர்க்கிறார். விவேக்கின் நண்பராக சார்லி கொஞ்சம் சிரிக்கவைக்கிறார். தேவ், பூஜா தேவரியா ஆகியோர் கதாபாத்திரத்துக்குத் தேவையானதைத் தந்திருக்கிறார்கள். அமெரிக்க நடிகர்களில் பெய்க் ஹெண்டர்சென் சிறப்பாக நடித்திருக்கிறார்.

ராமகோபால் கிருஷ்ணராஜுவின் பின்னணி இசை படத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஜெரால்ட் பீட்டரின் ஒளிப்பதிவு சியாட்டல் நகரை அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது. மொத்தத்தில் வேகம் சார்ந்த குறைகளைக் கடந்து ஒரு தரமான த்ரில்லர் படம் பார்த்த அனுபவத்தைத் தருகிறது ‘வெள்ளைப் பூக்கள்'.

SCROLL FOR NEXT