தமிழ் சினிமா

மனதுக்கு சரியென்று பட்டதைச் சொல்கிறேன்: ஜீ.வி. பிரகாஷ்

செய்திப்பிரிவு

மனதுக்கு சரியென்று பட்டதைச் சொல்கிறேன்.. சொல்வேன் என்று நடிகரும், இசையமைப்பாளருமான ஜீ.வி. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வாட்ச்மேன்’. ஜீ.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், சயிஷா சைகல் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படம் மே 12-ம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தின் டீஸருக்கு இணையத்தில் வரவேற்பு கிடைத்துள்ளது. ஏ.எல்.விஜய் இயக்கிய பல படங்களுக்கு  இசையமைப்பாளராகப் பணிபுரிந்துவிட்டு, தற்போது அவரது இயக்கத்தில் நாயகனாக நடித்த அனுபவம் குறித்து ஜீ.வி.பிரகாஷ் கூறியிருப்பதாவது:

''ஏ.எல்.விஜய் தான் என்னைத் திரையில் முதன் முதலாக தோன்ற வைத்தவர். 'தலைவா' படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலில் ஆட வைத்தார். 'நாச்சியார்' படத்தில் என் நடிப்பை பார்த்து தான் இந்த படத்தில் நடிக்கக் கேட்டார். அவர் இயக்கத்தில் நான் நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது. 

’வாட்ச்மேன்’ படம் காமெடியுடன் கூடிய த்ரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. தண்ணீர்  கேன் போடும் பையனான நான் இரவில் ஒரு வீட்டுக்குள் போகிறேன். அந்த பங்களாவில் இருப்பவர்கள், நடக்கும் சம்பவங்களைக் கொண்டு படம் நகரும். புருனோ என்ற நாய் படம் முழுக்க வரும்.

நாயைப் பார்த்தாலே பயப்படும் ஒருவன் நாயுடனே இரவு முழுக்க இருக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகிறான். அந்த நாய் அவனை காப்பாற்ற தான் முயற்சி செய்கிறது. ஆனால் அவனோ அந்த நாயைப் பார்த்து மிரள்கிறான். இப்படித்தான் திரைக்கதை நகரும். என்னை காப்பாற்ற நாய் செய்யும் செயல்களை குழந்தைகள் ரசிப்பார்கள். அந்த நாயுடன் சுமார் 40 நாட்கள் நடித்தேன். நாயும் குழந்தைகள் போலத் தான். அவற்றை அதட்டி மிரட்டி வேலை வாங்க முடியாது. புருனோவை நண்பனாக்கிக் கொண்டேன். இருந்தாலும் சில சமயம் முறைக்கும். பயமாக இருக்கும்.

குழந்தைகள் நம்மை ரசிக்கிறார்கள் எனும்போது, வெற்றிப் படங்கள் கொடுத்த மகிழ்ச்சி உருவாகிறது. குழந்தைகள் மனதைக் கவர்வது எளிதான காரியம் அல்ல. அது குறைந்த காலகட்டத்திலேயே எனக்குக் கிடைத்திருப்பது கடவுளின் வரம் தான்.

பலரும் அரசியல் தான் அடுத்த கட்டமா என்று கேட்கிறார்கள். இங்கு சொல்ல வேண்டியதை இன்னும் அதிகம் பேரைச் சென்று அடையும் வகையில் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். இதில் எந்தவிதமான எதிர்கால நோக்கமும் இல்லை. மனதுக்கு சரியென்று பட்டதைச் சொல்கிறேன். சொல்வேன். இந்த இடத்துக்குச் செல்லவேண்டும் என்று திட்டமிட்டு எதையும் சொல்வதோ செய்வதோ இல்லை''.

இவ்வாறு ஜீ.வி.பிரகாஷ் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT