இலங்கையில் கொடூரக் குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பாக தமிழ் திரையுலக பிரபலங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்களுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டனர். அப்போது, பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன. கொழும்பு நகரில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயம், முக்கிய நட்சத்திர ஓட்டல்கள், புனித செபாஸ்டியன் தேவாலயம், சீயோன் தேவாலயம் என மொத்தம் 8 இடங்களில் தாக்குதல்கள் நடந்துள்ளன.
இந்த கொடூர குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 300-ஐத் தொட்டுள்ளது. 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குண்டுவெடிப்பு தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்துக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தமிழ் திரையுலக பிரபலங்களின் கண்டனக் குரல்களின் தொகுப்பு இதோ:
சரத்குமார்: கொழும்புவில் நடத்தப்பட்ட கொடூரமான தீவிரவாதத் தாக்குதல் கண்டனத்துக்குரியது. இதில் உயிரிழந்த அப்பாவி உயிர்களுக்கு எங்கள் இரங்கல்.
வரலட்சுமி: மனித இனம் கொஞ்சம் கொஞ்சமாக வளரவேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாம் மிருகங்களாக இருந்த நிலையை நோக்கி பின்னால் சென்றுகொண்டிருப்பதைப் போலத் தெரிகிறது. என்ன மாதிரியான மனிதர்கள் வழிபாட்டு இடங்களில் குண்டு வைத்துக் கொல்வார்கள்? கடவுளுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? மனிதர்கள் மிருகங்களாக மாறிவிட்டார்கள். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு என் ஆறுதல்களும், பிரார்த்தனைகளும்.
செளந்தர்யா ரஜினிகாந்த்: இலங்கை தாக்குதல் அதிர்ச்சியையும், அதீத வருத்தத்தையும் தந்துள்ளது. இலங்கை மக்கள் மன தைரியத்துடன் இருக்க வேண்டும்.
அர்ச்சனா கல்பாத்தி: அதிர்ச்சியடைந்துள்ளேன். நாம் குரூரமான உலகத்தில்தான் வாழ்க்றோம். இந்தத் தாக்குதலில் தங்கள் சொந்தங்களை இழந்த அனைவருக்கும் என் இரங்கல்கள்.
விஷால்: இலங்கை வெடிகுண்டு பற்றி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இலங்கை மக்களுக்கு என் இரங்கல்களும், பிரார்த்தனைகளும். .
விஷ்ணு விஷால்: மனிதர்களின் மனிதத்தன்மையற்ற செயல் தொடர்கிறது. இலங்கை தாக்குதல்செய்தி பார்த்து வருத்தமாக உள்ளது. அவர்களுக்கு என் பிரார்த்தனைகள்.
அதுல்யா ரவி: இலங்கையிலிருந்து வரும் செய்தியைக் கேட்டு அதிர்ச்சையடைந்துள்ளேன். இனமும் மதமும் மனிதர்களை பிரிக்கக் கூஉடாது. 30 வருட போருக்குப் பின்னும் இலங்கையின் அழகு அப்படியே இருக்கிறது. இலங்கையில் உள்ள எங்கள் சகோதர சகோதரிகளுக்கு எனது வலி மிகுந்த இரங்கல்கள்.
ரகுல் ப்ரீத் சிங்: இலங்கை தாக்குதலால் கலக்கமடைந்துள்ளேன். என்ன ஒரு கோழைத்தனமான செயல். விவரிக்க வார்த்தைகளில்லை. மனிதம் இறந்து கொண்டிருக்கிறது. தங்கள் சொந்தங்களை இழந்த குடும்பங்களுக்கு மன வலிமை கிடக்கட்டும்
ஜி.வி.பிரகாஷ்: இலங்கை வெடிகுண்டு தாக்குதல் செய்தியால் ஆழ்ந்த அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்துள்ளேன். தங்கள் சொந்தங்களை இழந்த குடும்பங்களுக்கு என் மனப்பூர்வமான இரங்கல்கள். காயமடைந்தவர்கள் வேகமாக குணமாக என் பிரார்த்தனைகள்.
பூஜாகுமார்: ஏன் மதத்தின் பெயரால் இத்தனை வன்முறை? இதுதான் சமூகங்களுக்கு தேவையா? நமத முயற்சிகள் அனைத்தும் வன்முறை சார்ந்து இருந்தால் எப்படி அடுத்த தலைமுறைக்கு நாம் கற்றுத் தர முடியும்? எல்லோரும் விழித்துக் கொள்ளுங்கள். அன்பும், மன்னிப்பும் தான் உச்சக்கட்ட மகிழ்ச்சி.
வைபவ்: அடக்கடவுளே. இதற்கு ஒரு முடிவில்லையா? இறைவன் அனைவருடனும் இருக்கட்டும்.
பாவனா பாலகிருஷ்ணன்: இலங்கை தாக்குதல் குறித்து படித்து அதிர்ச்சியடைந்தேன். எவ்வளவு அழகான நாடு. உங்கள் அனைவருக்கும் என் இரங்கல்கள், பிரார்த்தனைகள்.