எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கவுள்ள புதிய படத்தில், ஹீரோவாக ஜெய் நடிக்கிறார்.
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘டூரிங் டாக்கீஸ்’. கதை, திரைக்கதை, வசனம் எழுதி எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரித்த இந்தப் படத்தில், அவரே ஹீரோவாகவும் நடித்தார். அபி சரவணன், மனோபாலா, ஏ.வெங்கடேஷ், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த இந்தப் படம், 2015-ம் ஆண்டு வெளியானது.
‘டூரிங் டாக்கீஸ்’ படத்தைத் தொடர்ந்து ‘நையப்புடை’, ‘கொடி’, ‘டிராஃபிக் ராமசாமி’, ‘ஆருத்ரா’ ஆகிய படங்களில் நடித்தார் எஸ்.ஏ.சந்திரசேகர். இதில், ‘டிராஃபிக் ராமசாமி’ படத்தில், டிராஃபிக் ராமசாமி கதாபாத்திரத்தில் படத்தின் நாயகனாக நடித்தார்.
இந்நிலையில், சில வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் படம் இயக்கப் போகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். இந்தப் படத்தில், ஹீரோவாக ஜெய் நடிக்கிறார். வருகிற 19-ம் தேதி படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இந்தப் படத்தை எஸ்.ஏ.சந்திரசேகரே தயாரிக்கிறார்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘பார்ட்டி’ மற்றும் எல்.சுரேஷ் இயக்கத்தில் ‘நீயா 2’ ஆகிய படங்கள் ஜெய் நடிப்பில் ரிலீஸுக்குத் தயாராகி வருகின்றன.