தமிழ் சினிமா

அக்னி தேவி பட சர்ச்சை: மதுபாலா வேதனை

ஸ்கிரீனன்

'அக்னி தேவி' பட சர்ச்சை தொடர்பாக மதுபாலா தனது ட்விட்டர் பக்கத்தில் வேதனை தெரிவித்துள்ளார்.

ஜே.பி.ஆர். மற்றும் ஷாம் சூர்யா இருவரும் இயக்கி, பாபி சிம்ஹா, மதுபாலா, ரம்யா நம்பீசன், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அக்னி தேவி'. இப்படத்தின் போது ஏற்பட்ட பிரச்சினையால் தயாரிப்பு நிறுவனமும், பாபி சிம்ஹாவும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

இப்பிரச்சினை தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம், பாபி சிம்ஹாவுக்கு எதிராகக் களமிறங்கியுள்ளது. இப்படத்தின் மீது போட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெறாவிட்டால், அவருக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்று முடிவெடுக்க உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் சர்ச்சைகள் குறித்து மதுபாலா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

'' 'அக்னிதேவி' தொடர்பாக என்ன நடக்கிறது என்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஒரு அழகான விஷயம் இப்படி அழியும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. எனது ஒட்டுமொத்த நடிப்பு வாழ்க்கையில் இந்தப் படத்தைப் பற்றித்தான் இவ்வளவு தூரம் அதன் தயாரிப்பு, விளம்பரம், வெளியீடு என ஒவ்வொரு அடியையும் கவனித்து வருகிறேன்.

இன்றுவரை நான் நடித்ததில் சிறந்த நடிப்பு இந்தப் படம் தான். ஜான் மற்றும் சூர்யா உங்களுக்காக வருந்துகிறேன். அன்பார்ந்த ஜான், நான் இதுவரை நடித்ததில் சிறந்த கதாபாத்திரத்தைக் கொடுத்திருக்கிறீர்கள். ஒரு நடிகையாக நான் எப்போதும் உங்களை ஆதரிப்பேன். ஒரு நடிகையாக இந்தக் கதாபாத்திரத்தில் நடித்ததில் நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்''.

இவ்வாறு மதுபாலா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT