ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு, விஜய் சேதுபதி ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில், 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை கோமதி மாரிமுத்து தங்கம் வென்றார். திருச்சி மாவட்டம் முடிகண்டம் கிராமத்தைச் சேர்ந்த கோமதியின் இந்தச் சாதனையை, பலரும் பாராட்டி வருகின்றனர்.
அவர் தங்கம் வென்ற செய்தி வெளியானதும், ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி வழங்குவதாக முதன்முதலில் அறிவித்தார் ரோபோ சங்கர். அதேபோல், சென்னை வந்த கோமதி மாரிமுத்துவிடம், ஒரு லட்சத்துக்கான காசோலையையும் வழங்கினார்.
இந்நிலையில், விஜய் சேதுபதி 5 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ‘லாபம்’ படத்தில் தற்போது நடித்துவரும் விஜய் சேதுபதி, தன்னுடைய ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் 5 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
மேலும், படப்பிடிப்பில் இருந்தவாறே செல்போனில் கோமதிக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.
அமமுக 10 லட்ச ரூபாய், திமுக 10 லட்ச ரூபாய், தமிழக காங்கிரஸ் 5 லட்ச ரூபாய், அதிமுக 15 லட்ச ரூபாய் என அரசியல் கட்சிகளும் கோமதி மாரிமுத்துவுக்கு நிதியுதவி வழங்கி வருகின்றன.