ஏ.ஆர்.ரஹ்மான் கதாசிரியராக அறிமுகமாகும் '99 சாங்ஸ்' திரைப்படம் ஜூன் 21-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் தயாரிப்பில் விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் படம் '99 சாங்ஸ்'. நீண்ட வருடங்களாக இப்படம் தயாரிப்பில் இருந்து வருகிறது. இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளிலும் உருவாகும் இப்படத்தின் மூலம் கதாசிரியராகவும் அறிமுகமாகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
இப்படம் எப்போது வெளியீடு என்பது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நான் தயாரித்து, எழுதியிருக்கும் முதல் படமான '99 சாங்ஸ்' (99 Songs) என்கிற இசையை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான காதல் படத்தின் வெளியீடு குறித்து அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சியிடைகிறேன்.
எனது தயாரிப்பு நிறுவனமான எய்.எம் மூவிஸ், ஜியோ ஸ்டுடியோஸோடு இந்த விசேஷமான படத்தின் வெளியீட்டில் கூட்டு சேர்ந்துள்ளதை ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளேன்.
'99 சாங்ஸ்' திரைப்படம் சர்வதேச அளவில், இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் 21 ஜூன் 2019 அன்று வெளியாகும். என் மீது நீங்கள் அனைவரும் காட்டும் அன்பு, ஆதரவு மற்றும் ஊக்கத்துக்கு நன்றி'' என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.
முழுக்க இசைக்கு முக்கியத்துவம் அளித்து உருவாகும் இப்படத்துக்கு இசையமைப்பாளராகவும் ஏ.ஆர்.ரஹ்மான் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.