தமிழ் சினிமா

சிம்பு படத்தைத் தொடர்ந்து அஜித் படம்: வெங்கட் பிரபு திட்டம்

செய்திப்பிரிவு

சிம்புவின் ‘மாநாடு’ படத்தைத் தொடர்ந்து அஜித்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார் இயக்குநர் வெங்கட்பிரபு.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பார்ட்டி’. சத்யராஜ், ஜெயராம், ஜெய், ஷாம், சிவா, சந்திரன், நாசர், சுரேஷ், சம்பத் ராஜ், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் என இப்படத்தில் நட்சத்திரப் படையே நடித்துள்ளது.

ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்ய, பிரேம்ஜி அமரன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். பிரவீன் கே.எல். எடிட் செய்துள்ளார். அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். விரைவில் இந்தப் படத்தை ரிலீஸ் செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், வெங்கட் பிரபு தயாரித்துள்ள ‘ஆர்.கே. நகர்’ திரைப்படம், வருகிற 12-ம் தேதி ரிலீஸாகிறது. சரவண ராஜன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ஹீரோவாக வைபவ் நடித்துள்ளார். சனா அல்தாஃப் ஹீரோயினாக நடிக்க, இனிகோ பிரபாகரன், சம்பத் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. அப்போது பேசிய பிரேம்ஜி அமரன், ‘சிம்பு படத்தைத் தொடர்ந்து அஜித்தை வைத்து ஒரு படத்தை வெங்கட் பிரபு இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு, அடுத்த மாதம் தொடங்கும் எனத் தெரிகிறது. இந்தப் படத்தில் சிம்பு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கிறார். வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

SCROLL FOR NEXT