சில படங்களில் இடம்பெற்ற இரட்டை அர்த்த காட்சிகள், சமீபத்தில் நயன்தாரா குறித்து ராதாரவியின் சர்ச்சைக்குரிய பேச்சு ஆகியவை குறித்த தனது ஆதங்கத்தை வீடியோ சந்திப்பு ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ பட இயக்குநர் லெனின் பாரதி. அவரது ஆதங்கம் குறித்து அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘இங்கே ஒரு படைப்பாளி தன் படைப்பைப் பற்றிய விமர்சனத்தை முன் வைப்பவர் மீது கோபப்படுகிறார். அதே படைப்பாளி தனது படைப்பை உருவாக்கும்போது பொறுப்புடன் இருக்க வேண்டும் என்பதை மறந்துவிடுகிறார். வியாபாரத்துக்காக ஆபாச வசனங்களை தனது படைப்புகளில் இடம்பெறச் செய்துவிட்டு, பார்வையாளன் அதை தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் நினைக்கிறார்கள். பார்வையாளர்களுக்கும் சுய மரியாதை உண்டு என்பதை உணர்ந்து, அதை படைப்பாளன் பொறுப்புடன் அணுக வேண்டும்!’’ என்று கூறினார்.
‘சந்திரமுகி’ படத்தின் ரஜினி, வடிவேலு பேசிய பல வசனங்கள் இரட்டை அர்த்த வசனங்களாக இருந்ததையும், ’நானும் ரவுடிதான்’ படத்தில் நயன்தாரா, பார்த்திபன் இடம்பெறும் காட்சிகளில் தவறான வசனங்கள் வைத்திருந்ததையும் அப்போது இயக்குநர் லெனின் பாரதி குறிப்பிட்டிருந்தார்.
‘மேற்குத் தொடர்ச்சி மலை’ படத்தின் வழியே பெரும் கவனத்தை ஈர்த்த லெனின் பாரதி அடுத்து வாழ்வியல் சார்ந்த களத்தில் ஒரு திரைக்கதையை எழுதி வருகிறார். அதில் நிஜ வாழ்வியலும் அரசியல் பார்வையும் இருக்கும் என்றார்.