மகேந்திரன் மறைவுக்காக கோபி பிரசன்னாவின் படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
'முள்ளும் மலரும்', 'ஜானி' உள்ளிட்ட மறக்க முடியாத படங்களைக் கொடுத்த இயக்குநர் மகேந்திரன், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 79. இவரது மறைவு, தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பாகக் கருதப்படுகிறது.
மறைந்த மகேந்திரனின் உடலுக்கு ரஜினி, கமல், இளையராஜா, பாரதிராஜா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். ஊரில் இல்லாதவர்கள் தங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் இரங்கல் தெரிவித்தார்கள்.
இந்நிலையில், 'ஆரண்ய காண்டம்', 'கத்தி', 'மெர்சல்', 'சர்கார்', 'சூப்பர் டீலக்ஸ்', 'விக்ரம் வேதா' உள்ளிட்ட பல படங்களின் போஸ்டர்களை வடிவமைத்தவர் கோபி பிரசன்னா. இவரது ஃபர்ஸ்ட் லுக் வடிவமைப்புகள் அனைத்துமே பெரும் வரவேற்பைப் பெற்றவை.
தற்போது, இயக்குநர் மகேந்திரன் மறைவுக்காக படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது திரையுலகினர் மத்தியில் மட்டுமன்றி, சமூக வலைதளத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
மகேந்திரன் இயக்கிய 'உதிரிப்பூக்கள்' படம் மிகவும் பிரபலம் என்பதால், ரோஜா இதழ்கள் எதுவும் இல்லாமல், வெறும் காம்பு மட்டும் இருப்பது போல் அந்தப் படம் அமைந்திருந்தது.